2 கோழிக்கழுத்தையும் திருகிடுவோம்.. துண்டு துண்டாகிறதா வங்கதேசம்? முகமது யூனுசுக்கு இந்தியா பதிலடி
கவுஹாத்தி: நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை பிரிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பேசி வருகிறார். இந்நிலையில் தான் உங்களிடம் 2 கோழிக்கழுத்து பகுதிகள் உள்ளது. இந்த இடங்களை குறிவைத்தால் வங்கதேசம் துண்டாகிவிடும் என்று நம் நாடு பதிலடி கொடுத்துள்ளது.
வங்கதேசத்தில் தற்போது இடைக்கால அரசு நடந்து வருகிறது. தலைமை ஆலேசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு என்பது பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தவரை அவர் நம் நாட்டுடன் நெருக்கம் காட்டி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அங்கு நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையானதால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம்நாட்டில் தஞ்சமடைந்தார்.
அதன்பிறகு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்புக்கு வந்த முகமது யூனுஸ் கண்டபடி ஆட்டம் போட்டு வருகிறார். நம் நாட்டின் எல்லையில் பதற்றத்தை உருவாக்கி வருகிறார். அதுமட்டுமின்றி சீனா, பாகிஸ்தான், துருக்கியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதுதவிர நம் நாட்டுக்கு எதிரான மதஅடிப்படைவாதிகளை சிறையில் இருந்து விடுவித்துள்ளார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக முகமது யூனுஸ் நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து செயல்பட்டு வருகிறார்.
அதாவது வடகிழக்கு மாநிலங்களை மேற்கு வங்கம் வழியாக சிக்கன் நெக் எனும் கோழிக்கழுத்து பகுதி வழியாக சிலிகுரி காரிடார் தான் நம்நாட்டுடன் இணைக்கிறது. இந்த கோழிக்கழுத்து பகுதி என்பது வங்கதேசத்தையொட்டி செல்கிறது. இதனால் இந்த இடத்தை குறிவைத்து அவர் பேசி வருகிறார். சமீபத்தில் சீனாவுக்கு சென்ற முகமது யூனுஸ், ‛‛வங்காள விரிகுடாவின் ஒரே பாதுகாவலன் வங்கதேசம் தான். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார். அதாவது வடகிழக்கு மாநிலங்களையொட்டி வங்கதேசம் உள்ளது. இந்த பகுதியில் முதலீடு செய்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தலாம் என்று அவர் மறைமுகமாக கூறியிருந்தார்.
இதுதவிர சிலிகுரி காரிடாரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் வங்கதேசத்தின் லால்மோனிர்ஹாட் என்ற இடம் உள்ளது. இங்கு 2ம் உலகப் போர் காலத்தில் விமானத்தளம் அமைந்தது. இந்த விமானத்தளத்தை மீண்டும் வங்கதேசம் புனரமைக்க உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் நம் நாட்டுக்கு வங்கதேசத்தால் நம் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். குறிப்பாக நம் நாட்டின் கோழிக்கழுத்து பகுதி துண்டிக்கப்படும் பட்சத்தில் வடகிழக்கு மாநிலங்கள் நம் நாட்டுடன் சாலை வழியாக தொடர்பின்றி இருக்கும் நிலை உருவாகும்.
வங்கதேசத்தின் இந்த செயலுக்கு நம் நாடு உரிய பதிலடியை கொடுத்து வருகிறது. அந்த வகையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக உள்ள அசாமின் பாஜக முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா வங்கதேசத்தை விளாசி வருகிறார். பொதுவாக இருநாடுகள் இடையேயான பிரச்சனையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் தான் கருத்து தெரிவிப்பார்கள். ஆனால் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்து வருகிறார். இதன்மூலம் ஹிமாந்த பிஸ்வா சர்மா மூலம் வங்கதேசத்துக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. உங்களை சமாளிக்க இந்திய அரசு தேவையில்லை. எங்களின் ஒரு மாநில முதல்வரே போதும் என்று வங்கதேசத்துக்கு மத்திய அரசு மெசேஜ் அனுப்பும் வகையில் இந்த செயலை செய்வதாக கூறப்படுகிறது.
அதன்படி அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா சிக்கன் நெக் பகுதி குறித்து கருத்து தெரிவித்து வரும் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுசுக்கு கடும் வார்னிங் தந்துள்ளார். அதாவது வங்கதேசம் தங்களின் 2 சிக்கன் நெக் பகுதிகள் இருப்பதை மறந்து விட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஹிமாந்த பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‛‛இந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தி வருபவர்கள் (முகமது யூனுஸ்) இந்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். வங்கதேசம் 2 சிக்கன் நெக் பகுதிகளை கொண்டுள்ளது. அவை இரண்டுமே ரொம்ப பாதிக்கப்படக் கூடியவை.
முதலாவது 80 கிமீ, வடக்கு வங்கதேச வழித்தடம். டாக்கின் தினாஜ்பூரிலிருந்து தென்மேற்கு காரோ மலைகள் வரையில் உள்ளது. இங்கு ஏற்படும் எந்தவொரு இடையூறும், முழு ரங்பூர் பிரிவையும் வங்கதேசத்தின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் பிரித்து விடும். 2வது தெற்கு திரிபுராவில் இருந்து வங்காள விரிகுடா வரையிலான 28 கிமீ சிட்டகாங் வழித்தடம். இந்தியாவின் சிக்கன் நெக் பகுதியை விட சின்னஞ்சிறு பாதை தான் இது. இந்த வழித்தடம், வங்கதேசத்தின் பொருளாதார தலைநகருக்கும், அரசியல் தலைநகருக்கும் இடையிலான ஒரே இணைப்பாகும். சிலர் மறந்துவிடக்கூடிய புவியியல் உண்மைகளை மட்டுமே நான் முன்வைக்கிறேன். இந்தியாவின் சிலிகுரி வழித்தடத்தை(சிக்கன்நெக்) போலவே, நமது அண்டை நாடும் இரண்டு குறுகிய வழித்தடங்களைக் கொண்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications