இன்று வசந்த பஞ்சமி! இனி எந்த பிரச்சினையும் வந்துட கூடாது.. மகா கும்பமேளாவில் கடுமையான கட்டுப்பாடுகள்
லக்னோ: மகா கும்பமேளாவில், இன்று வசந்த பஞ்சமியை முன்னிட்டு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்துள்ளனர். அதிகாலையிலேயே பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுவதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பக்தர்கள் புனித நீராடிய பிறகும், தேவையில்லாமல் படித்துறைகளில் தங்க கூடாது, படித்துறைகளில் சாப்பிட கூடாது, சாப்பிடுவதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சாப்பிட செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ளவும், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவும் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துறவிகள், சாதுக்கள், ஆன்மிக பெரியவர்கள் மற்றும் பக்தர்கள் என கோடிக்கணக்கானோர் பிரயாக்ராஜிக்கு வந்து செல்கிறார்கள்.

இன்று வசந்த பஞ்சமி
இதனால், அங்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மகா கும்பமேளா தொடங்கியதில் இருந்து இதுவரை 35 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவில் புனித நீராடுவதற்கான முக்கிய தினங்களாக மகரசங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகியவை கூறப்படுகிறது. இதில் இன்று வசந்த பஞ்சமி தினமாகும்.
காலைக்குள் 16 லட்சம் பேர் புனித நீராடல்
இதன் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலையில் இருந்தே வசந்த பஞ்சமி புனித நீராடலை பக்தர்கள் தொடங்கி விட்டனர். இன்று அதிகாலையிலேயே பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இன்று காலை 4 மணிக்குள் சுமார் 16 லட்சம் பக்தர்கள் புனித நீராடியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
இன்று ஒருநாளில் மட்டும் 3 கோடி பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என்று எதிபார்க்கப்படுவதால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தர பிரதேச அரசு செய்துள்ளது. கடந்த புதன் கிழமை நடைபெற்ற மவுனி அமாவாசை புனித நீராடலின் போது கூட்ட நெரிசல் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து பக்தர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துணை ராணுவம் குவிப்பு
இன்று கும்பமேளாவில் வரும் கூட்டத்தை ஒழுங்க்குபடுத்த முக்கிய இடங்களில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாரும் அதிக எண்ணிக்கையில் பாதுகபபு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவ அவசர நிலையை கையாள ஏதுவாக பிரக்யாராஜ்ஜில் மொத்த சுகாதார கட்டமைப்பும் தயாராக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்ய நாத் வீட்டில் சிறப்பு வார் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணியில் இருந்தே சூழலை தொடர்ந்து அவர் கண்காணித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications