20 பேர் சுட்டுக்கொலை.. 43 ஆண்டுக்கு பின் பெஹ்மாய் வழக்கில் பூலான் தேவி கூட்டாளிக்கு ஆயுள் தண்டனை
லக்னோ: இந்தியாவையே உலுக்கும் வகையில் 1981ம் ஆண்டில் நடந்த பெஹ்மாய் படுகொலை வழக்கில் 20 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 43 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் பூலான்தேவியின் கூட்டாளியான ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ள நிலையில் இன்னொருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பெஹ்மாய் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 1981ம் ஆண்டு பெரிய அளவில் மோதல் நடந்தது. அதாவது கொள்ளையர்களின் ராணி என அழைக்கப்படும் பூலான் தேவி என்பவர் பெஹ்மாய் கிராமத்தின் தாக்கூர் சமுதாயத்தை சேர்ந்த 2 கொள்ளையர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தனக்கு நேர்ந்த இந்த சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கத்தில் கடந்த 1981ம் ஆண்டு பூலான்தேவி தனது கூட்டாளிகளுடன் பெஹ்மாய் கிராமத்துக்குள் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தாக்கூர் சமுதாயத்தை சேர்ந்த 20 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சொல்லப்போனால் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய ராஜ்பூர் போலீசார் பூலான் தேவி உள்பட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். பூலான்தேவி உள்பட மொத்தம் 35 பேர் மீது குற்றம்சுமர்த்தப்பட்டது.
இதில் சிலர் என்கவுண்ட்டர் முறையில் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் வயது முதிர்வு, நோய்வாய்ப்பட்டு இறந்தனர். பூலான்தேவி தனது புகழை பயன்படுத்தி அரசியலுக்குள் நுழைந்தார். சமாஜ்வாதி கட்சியில் இணைந்து எம்பியாகி இருந்தார். கடந்த 2001ம் ஆண்டு டெல்லியில் வைத்து கொல்லப்பட்டார்.
இத்தகைய சூழலில் தான் பெஹ்மாய் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சியாம் பாபு, விஸ்வநாத் ஆகியோர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். இந்நிலையில் தான் பெஹ்மாய் படுகொலை வழக்கு உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் 43 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி அமித் மாள்வியா தீர்ப்பு வழங்கினார். 43 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உயிருடன் இருக்கும் சியாம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மாறாக விஸ்வநாத் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications