மே வங்க தேர்தல் வன்முறை.. கொலை, பாலியல் குற்றங்களில்.. சிபிஐ விசாரணை தேவை.. மனித உரிமைகள் ஆணையம்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அங்கு நடந்த வன்முறையைத் தடுக்க மேற்கு வங்க அரசு முனைப்புக் காட்டவில்லை என விமர்சித்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றது, அக்கட்சியின் தலைவர் மம்தா, மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அங்கு மிகப் பெரியளவில் வன்முறை ஏற்பட்டது. குறிப்பாக பாஜகவுக்கு ஆதரவாக இருந்தவர்கள் பெண்கள் தாக்கப்பட்டதாக்கக் கூறப்படுகிறது.

மேற்கு வங்க வன்முறை
இந்த வன்முறை குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், வன்முறை தொடர்பாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் கொல்கத்தா உயரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் மாநில அரசுகளின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததாகவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் கூறப்பட்டுள்ளது.

பழிவாங்கும் வன்முறை
தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது அறிக்கையில், "எதிர்க்கட்சியினர் மீது பழி வாங்கும் வகையில் இந்த வன்முறை நடந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை மோசமாக்கும் வகையில் வன்முறை இப்போதும் தொடர்கிறது. ஆளும் கட்சியினர் மற்றும் போலீசார் ஆகியோருக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்கள் இடையே அச்சம் நிலவுகிறது.

பாலியல் குற்றங்கள்
வன்முறை காரணமாக வேறு இடங்களுக்குச் சென்றவர்களால் இன்னும்கூட அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையே உள்ளது. இயல்பு வாழ்க்கையைத் தொடங்க முடியாத சூழலில் அவர்கள் உள்ளனர். பல பாலியல் குற்றங்களும் நடந்துள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பேசப் பயப்படுகிறார்கள். அவர்கள் மாநில நிர்வாகத்தின் நம்பிக்கை முழுமையாக இழந்துவிட்டனர்.

சிபிஐ விசாரணை
இந்த வன்முறையின்போது நடந்த கொலை, பாலியல் வன்புணர்வு போன்ற குற்றங்களின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். இவை மாநிலத்திற்கு வெளியே விசாரிக்கப்பட வேண்டும்" எனத் தேசிய மனித உரிமை ஆணையம் தனது பரிந்துரையை அளித்திருந்தது. இருப்பினும், இந்த அறிக்கையை மம்தா பானர்ஜி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மம்தா தாக்கு
தேசிய மனித உரிமைகள் ஆணையம் நீதிமன்றத்தை அவமதித்து அறிக்கையை ஊடகங்களில் கசியவிட்டுள்ளதாகச் சாடினார். பாஜக தனது அரசியல் லாபங்களுக்காக இதுபோல நடந்து கொள்வதாகவும் மனித உரிமைகள் ஆணையம் மாநில அரசின் கருத்தைக் கேட்காமல் முடிவுக்கு வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாஜக
தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே மிகப் பெரிய வன்முறையை திரிணாமுல் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும், வன்முறை தொடர்பான கருத்துகள் ஊதி பெரிதாக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ், இந்த வன்முறைகள் மே 2ஆம் தேதி நடந்ததாகவும் அப்போது மாநிலத்தின் சட்ட ஒழுங்கு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications