"மோடி என் 15ஆவது பையன்.." 25 ஏக்கர் நிலம்.. அப்படியே வாரி வழங்கிய மூதாட்டி! நெகிழ்ச்சியின் உச்சம்
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தனக்குச் சொந்தமான அனைத்து நிலத்தையும் பிரதமர் மோடிக்கு எழுதி வைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி உலகளவில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். சுமார் 12 ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்த அவர், 2014 முதல் நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார்.
2014 மற்றும் 2019 என இரண்டு தேர்தல்களிலும் மோடி தலைமையிலான பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால் நாட்டில் மிகவும் செல்வாக்கு கொண்ட தலைவர்களில் ஒருவராகப் பிரதமர் மோடி இருக்கிறார்.

பிரதமர் மோடி மீது வைத்துள்ள அன்பு காரணமாக இங்கே பலரும் பல வித செயல்களைச் செய்து வருகின்றனர். இதற்கிடையே அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 100 வயது பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு 25 ஏக்கர் நிலத்தைப் பரிசாக அளித்துள்ளார். நாட்டை முன்னேற்றப் பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கண்டே இந்த நிலத்தை அளிப்பதாக அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் ஹரிபுரா ஜாகிர் கிராமத்தில் வசித்து வரும் பெண் மங்கி பாய் தன்வார்.. 100 வயதான இந்தப் பெண், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு விஷயங்களைச் செய்து வருவதாகக் குறிப்பிடும் இவர், தனது 25 ஏக்கர் நிலத்தைப் பிரதமர் மோடிக்கே எழுதி வைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த மங்கிபாய் தன்வாருக்கு ஏற்கனவே 12 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 14 குழந்தைகள் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியைத் தனது மகனாகவே கருதும் இவர், மோடி தனது 15ஆவது குழந்தை என்றும் மற்றவர்களை விட மோடியைத் தான் அதிகம் பிடிக்கும் என்றும் குறிப்பிடுகிறார். அவரது வீட்டில் உள்ள சுவர்களிலும் மோடியின் படத்தை ஓட்டியுள்ளார்.
இது குறித்து யாராவது எதாவது சொன்னால், எனது மகனின் படத்தை நான் வைத்துள்ளேன்.. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை எனப் பதிலுக்குக் கேள்வி எழுப்புகிறாராம். பிரதமர் மோடி குறித்து அவர் பேசுகையில், "கொரோனா காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் உயிரை நரேந்திர மோடி காப்பாற்றினார். நாட்டிற்குச் சேவை செய்வதிலேயே எனது மகன் (மோடி) கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் தனது நாட்டு மக்களைத் தனது குடும்பமாகக் கருதுகிறார். அவர் எங்களையும் நன்கு கவனித்துக்கொள்கிறார். எனவே எனது பங்காக நான் அவருக்கு 25 ஏக்கர் நிலத்தை வழங்குகிறேன். நான் அவரை என் மகனாகவே கருதுகிறேன். தினமும் காலையில் எழுந்து மோடியின் போட்டோவை தான் பார்ப்பேன்.
பிரபல இந்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "என்னைப் போலப் பல கோடி விதவைகளுக்கு ஓய்வூதியம் வழங்குகிறார். விவசாயிகளுக்குக் கோதுமை, அரிசி மற்றும் தானியங்களை வழங்கினார். பயிர் சேதம் ஏற்பட்டால் உரிய இழப்பீடும் வழங்கப்படுகிறது. நாங்கள் வாழ்வதற்கு உறுதியான வீடு கிடைத்துள்ளது. வேறு என்ன வேண்டும் எங்களுக்கு. இதன் காரணமாகவே நான் மோடிக்கு எனது நிலத்தைத் தருவதாகச் சொல்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications