ஹரியானா தேர்தல் கள நிலவரமே வேற..வாக்கு எண்ணிக்கையையே நிறுத்திட்டாங்க.. பூபிந்தர் சிங் ஹூடா குமுறல்
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை பல தொகுதிகளில் நிறுத்திவிட்டனர்; முழுமையான முடிவுகள் வெளியாகும் போது காங்கிரஸ் கட்சிக்குதான் பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்கும் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஹரியானாவில் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஹரியானா வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் காங்கிரஸ் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்தது. ஆனால் திடீரென பாஜக பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஹரியானா தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இந்திய தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே தாமதம் செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 70 தொகுதிகளுக்கு மேல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஹரியானாவில் 30 தொகுதிகளுக்கு கூட முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டு.
இதனிடையே சண்டிகரில் செய்தியாளர்களை சந்தித்த ஹரியானா முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா, ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்குதான் பெரும்பான்மை கிடைக்கும். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகட்டும். இது ஒரு விளையாட்டு களம். சில நேரங்களில் பந்துகள் கைமாறிக் கொண்டே இருக்கும். ஹரியானாவின் பல தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையையே நிறுத்தியும் வைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் ஏன் இப்படி பாரபட்சமாக செயல்படுகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஹரியானாவில் தற்போதைய நிலவரப் படி மொத்தம் 27 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் அதிகபட்சமாக 14 தொகுதிகளில் வென்றுள்ளது. 20 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக 11 தொகுதிக்ளில் வென்றுள்ளது. 39 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 2 தொகுதிகளில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications