பீகார் தலையெழுத்தை தீர்மானிக்கும் அந்த 6000 வாக்குகள்.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் எல்லாம் மாறிடும்
பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. இதற்கிடையே இந்த முறை அங்கு யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதை வெறும் 6,300 வாக்குகள் முடிவு செய்யும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பீகாரில் இப்போது நிதிஷ் குமார்- பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. அங்கு எதிர்க்கட்சிகளான தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலுக்குச் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் தீவிரப் பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டது. அனைத்துத் தரப்புமே சீக்கிரம் தொகுதிப் பங்கீட்டை முடித்து, இறுதிக்கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளன.

வெறும் 6000 வாக்குகள்
இதற்கிடையே பீகார் மாநிலத்தின் தலையெழுத்தையே வெறும் சில ஆயிரம் வாக்குகள் முடிவு செய்யும் சூழலே இருக்கிறது.. குறிப்பாக அங்கு ஆட்சியைப் பிடிக்கும் கட்சி எது யார் என்பதை 6,000 முதல் 7,000 வாக்குகளே முடிவ செய்யும் நிலை உள்ளது.
கடந்த 2020ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே கூட பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. அங்கு மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 11,000 வாக்குகள் மட்டுமே இருந்தது. அதாவது, சில நூறு வாக்குகள் மாறியிருந்தால் அப்போதே தேர்தல் முடிவுகள் மாறியிருக்கும்.
தீவிரமடையும் மோதல்
இந்த முறையும் கிட்டத்தட்ட அதே நிலைமை தான். சொல்லப்போனால் போட்டி மேலும் தீவிரமாகியுள்ளது என்று சொல்லலாம். சமீபத்தில் தேர்தல் ஆணையம் தனது சார் வாக்காளர் பட்டியல் மறுபரிசீலனை நடவடிக்கையில் சுமார் 51 லட்சம் பேரை நீக்கியது. இது மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் சுமார் 6% ஆகும். பெரும்பாலும் ஒரு சில தொகுதிகளில் இருந்தே அதிகபட்ச நீக்கம் நடந்துள்ளது.
கடந்த 2020 தேர்தலில் கூட சுமார் 6,300 வாக்குகள் மட்டும் மாறியிருந்தால், என்டிஏ ஆட்சியை இழந்திருக்கும். அதாவது 2020 தேர்தல் முடிவுகளைக் கவனித்துப் பார்த்தால் ஒன்று நமக்குத் தெளிவாகத் தெரியும். அப்போது அங்கு 12 தொகுதிகளில் வெற்றி- தோல்வி மாறியிருந்தால், பீகாரில் வேறு ஒரு முதலமைச்சர் வந்திருப்பார். அந்த 12 தொகுதிகளிலும் கூட வெறும் 6,292 வாக்காளர்கள் மாற்றி வாக்களித்திருந்தால் முடிவுகள் மாறியிருக்கும்.
சார் நடவடிக்கை
எனவே, இந்தாண்டு நடந்துள்ள வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் தேர்தல் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதுதான் இந்தத் தேர்தலை மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது. சார் நடவடிக்கையில் பல வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், போட்டி கடுமையாக இருப்பதால் அது பல தொகுதிகளில் முடிவுகளை மாற்றக்கூடும்.
மேலும், இந்த முறை தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தலைமையிலான 'ஜன் சுராஜ்' கட்சியும் பீகாரில் போட்டியிடுகிறது. அவரது பிரச்சாரம் அனைத்துச் சாதிகள் மற்றும் சமூகத்தினர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனால் வழக்கமாகச் சாதி பார்த்து வாக்களிப்போரில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் பிரசாந்த் கிஷோர் பக்கம் போகலாம். இது போட்டியை மேலும் நெருக்கமாக மாற்றும்.
சில ஆயிரம் வாக்குகள்
கூட்டணிகள் மாறுவது, தலைவர்கள் கட்சி மாறுவது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முயல்வது எனத் தற்போது பீகாரில் நடந்து வரும் அரசியல் மாற்றங்கள் அங்கு நடக்கும் சட்டசபைத் தேர்தலை மிகவும் கணிக்க முடியாததாக ஆக்குகின்றன. சுருக்கமாகச் சொன்னால், இந்தத் தேர்தல் பெரிய தலைவர்கள் அல்லது வாக்குறுதிகளால் தீர்மானிக்கப்படாது.. வெறும் சில ஆயிரம் வாக்குகளால் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்பது தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications