நிதிஷ்குமாருக்கு கை கொடுத்த மு.க. ஸ்டாலின் பாணியிலான 'நமக்கு நாமே' வியூகம்!!
பாட்னா: பீகார் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியைப் போல பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்காமல் சிறு சிறு கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களுக்கு நெருக்கமானவராக நிதிஷ்குமார் ஐக்கியப்படுத்திக் கொண்டது அவரது அமோக வெற்றிக்கு முக்கிய காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பீகார் சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை நிதிஷ்குமார்- லாலு கூட்டணி எட்டியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி கனவிலும் நினைத்துப் பார்க்காத படுதோல்வியை சுமந்து கொண்டிருக்கிறது. நிதிஷ்குமார் - லாலு கூட்டணியை வீழ்த்த அமித்ஷா போட்ட எந்த ஒரு வியூகமும் எடுபடாமல் போயுள்ளது.

அரசுக்கு எதிரான மனநிலை இல்லை
பீகார் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் வெளியான அத்தனை கருத்து கணிப்புகளிலும் நிதிஷ் அரசு மீது மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தனர். நிதிஷ் அரசின் நிர்வாகத்துக்கு அதிக வாக்குகளை தெரிவித்திருந்தனர். ஆளும் அரசுக்கு எதிரான மனநிலை என்பது இல்லாத ஒரு தேர்தல் களமாகத்தான் இருந்தது. இது நிதிஷ்குமார்- லாலு கூட்டணிக்கு பெரும் சாதகமாகவும் அமைந்தது. ஒடிஷாவில் நவீன் பட்நாயக், சத்தீஸ்கர் ரமண்சிங், மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் போல ஒரு வலிமையான நம்பிக்கையான தலைவராக நிதிஷை பீகார் மக்கள் பார்ப்பதும் இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது.
அப்படிப்பட்ட மக்கள் ஏன் லோக்சபா தேர்தலில் தோற்கடித்தார் எனில் அது நாடாளுமன்றத் தேர்தல், பிரதமர் பதவிக்கான தேர்தல் என்பதால் மக்கள் மோடியை தேர்ந்தெடுத்தனர். லோக்சபா தேர்தலில் டெல்லியில் அத்தனை தொகுதிகளையும் பா.ஜ.க.வுக்கு அள்ளிக் கொடுத்த வாக்காளர்கள், சட்டசபை தேர்தலில் கேஜ்ரிவாலைத்தான் அரவணைத்தார்கள்.. பா.ஜ.க.வை சீண்டக் கூட இல்லை. அதுதான் தற்போது பீகாரிலும் நடந்துள்ளது.

இடஒதுக்கீடு
மேலும் பீகாரின் அடிப்படை என்பது பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் ஆதிக்கம் உள்ள மண். இங்கே இடஒதுக்கீடும் சமூக நீதி என்பதும் என்பது அவர்களுக்கான உயிர்நாடி. இந்த உயிர்நாடியை அறுப்பது போல ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்வோம் என பேசியது பாஜகவுக்கு பெரும் பின்னடைவைத்தான் ஏற்படுத்தியுள்ளது. சமூகநீதித் தலைவர்களாக பார்க்கப்பட்ட நிதிஷ்குமார், லாலு பக்கம் வாக்காளர்களை தள்ளிவிட்டது மோகன் பகவத்தின் சர்ச்சை பேச்சு.

முஸ்லிம் வாக்குகள்
பீகாரில் முஸ்லிம்கள் கூட பா.ஜ.க.வுக்கு ஆதரவளிப்பார்கள் என்றெல்லாம் கூட சில ஊடகங்கள் கருத்து பதிவு செய்தன. ஆனால் பீகாரில் உள்ள 15% இஸ்லாமியர் வாக்குகளும் தொடர்ந்தும் தங்களது ஆதரவை நிதிஷுக்கும் லாலுவுக்கும் அளித்தனர். கடந்த லோக்சபா தேர்தலில் இந்த 15% வாக்குகள் பிரிந்து போனதும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு ஒரு காரணம்.... இப்போது லாலுவும் நிதிஷும் இணைந்து ஒரே அணியாக நின்றதால் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் வாக்கு லாலு-நிதிஷ் அணிக்கு சேதாரமில்லாமல் சென்றுவிட்டது.

காங்கிரஸ் வியூகம்
பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வகுத்த வியூகமும் இந்த வெற்றிக்கு பிரதான காரணமாக சொல்லலாம். பரம வைரிகளாக இருந்த லாலுவையும் நிதிஷையும் ஒரே கூட்டணிக்குள் கொண்டு வர வைத்தது; சிக்கலின்றி தொகுதிப் பங்கீடு; நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக ஏற்குமாறு லாலு பிரசாத் யாதவை சம்மதிக்க வைத்தது என அனைத்திலும் காங்கிரஸ் பங்களிப்பு இருக்கிறது. அதாவது பா.ஜ.க.வை வீழ்த்த எத்தனை விட்டுக் கொடுப்புகளையும் செய்வோம் என ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா மற்றும் காங்கிரஸ் மூன்றும் கங்கணம் கட்டி செயல்பட்டதும் மக்களின் பெருநம்பிக்கையை அறுவடை செய்திருக்கிறது.

உள்ளூர் பிரபலம் இல்லை
அத்துடன் பீகாரில் பாரதிய ஜனதாவால் முன்னிறுத்தப்படக் கூடிய ஒரு வலிமையான "உள்ளூர்" முகம் யாரும் இல்லாதது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.

வி.கே.சிங் திமிர் பேச்சு
மேலும் தலித் பிஞ்சுக் குழந்தைகள் ஹரியானாவில் எரிக்கப்பட்ட போது, யாரோ நாய்கள் மீது கல்லெறிந்தால் மத்திய அரசு மீது பாய்வதா? என்ற வி.கே.சிங் பேச்சு ஒட்டுமொத்தமாக தலித் வாக்குகளை மடை மாற்றியிருக்கிறது. இத்தனைக்கும் தலித் தலைவர்களான பாஸ்வானும் மாஞ்சியும் பா.ஜ.க. அணியில் இடம்பெற்றிருந்தும் எந்த ஒரு பயனும் கிடைக்காமல் போனது வி.கே.சிங் வகையறாக்களின் திமிர் பேச்சால்தான்..

ஸ்டாலின் ஸ்டைல் நமக்கு நாமே
இவற்றுக்கெல்லாம் மேலாக நிதிஷ்குமார் தம்மை மக்களில் ஒருவராக ஐக்கியப்படுத்திக் கொண்ட பிரசார யுக்தியும் மிக முக்கியமான காரணியாக சொல்லப்படுகிறது. பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து அதில் பேசிவிட்டுப் போவதில் நிதிஷ்குமார் கவனம் செலுத்தவில்லை; மக்களை நேரடியாக சென்று சந்தித்தார்.. சிறு சிறு குழுக்களாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். டெல்லியில் கேஜ்ரிவால் பின்பற்றியதைப் போல வீட்டுக்கு வீடு பிரசார யுக்தியை நிதிஷ் கடைபிடித்தார்.
தமிழகத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு மக்கள் குழுக்களை சந்தித்து வருவதைப் போல மக்களோடு மக்களாக உரையாடி அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக தம்மை வெளிப்படுத்தி வந்தவர் நிதிஷ்குமார்... அதனால்தான் அவரை அந்த மக்கள் நேசித்து வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் என்பதுதான் நிதர்சனம்.












Click it and Unblock the Notifications