"அப்படியொரு வேலையே வேண்டாம்.." ஹிஜாப்பை அகற்றிய நிதிஷ்குமார்.. பணியில் சேர மறுத்த பெண் மருத்துவர்
பாட்னா: பீகாரில் கடந்த வாரம் பணி நியமன ஆடைகளை வழங்கிய போது நிதிஷ் குமார், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அகற்றியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட அந்தப் பெண் மருத்துவர் பணிக்குச் சேரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண் நேற்று பணிக்குச் சேரவிருந்த நிலையில், அவர் நேற்று மாலை வரையிலும் பணிக்குச் சேரவில்லை எனச் சொல்லப்படுகிறது.
பீகார் முதல்வரான நிதிஷ்குமார் கடந்த சில காலமாகவே அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அப்படித் தான் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரது செயல் பரபரப்பைக் கிளப்பியது. அதாவது பணி நியமன ஆணைகளை வழங்கியபோது அவர் பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அகற்றினார். இது சர்ச்சையானது.

பணிக்குச் சேரவில்லை
இதற்கிடையே சம்பந்தப்பட்ட அந்தப் பெண் மருத்துவர் பணிக்குச் சேரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆயுஷ் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் நேற்று சனிக்கிழமை பணிக்குச் சேர்ந்திருக்க வேண்டும். இருப்பினும், அவர் நேற்று இரவு 7 மணி வரையிலும் பணிக்குச் சேரவில்லை என்று பாட்னா சிவில் சர்ஜன் அவினாஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவினாஷ் குமார் கூறுகையில், "பணியில் சேர கடைசித் தேதி டிசம்பர் 20 என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர் நேற்று பணிக்கு வரவில்லை. பர்வீன் திங்கட்கிழமை சேருவாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார். அதேநேரம் பர்வீன் பணிக்குச் சேர எது கடைசி நாள் என்று காலக்கெடு எதையும் அவர் சொல்லவில்லை.
வரவில்லை
டாக்டர் பர்வீன், பாட்னா சதர் பகுதியில் உள்ள சபால்பூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கு மருத்துவராக இருக்கும் விஜய் குமாரும், பர்வீன் பணிக்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர், "சனிக்கிழமை 5, 6 பேர் பணியில் இணைந்தனர். இருப்பினும், பர்வீன் பணிக்கு வரவில்லை" என்றார்.
பின்னணி
கடந்த திங்கள்கிழமை பணி நியமன ஆணைகளைக் கொடுக்கும்போது தான் அந்தச் சர்ச்சை சம்பவம் நடந்தது. நிதிஷ்குமாரிடம் இருந்து பர்வீன் பணிநியமன ஆணையைப் பெற வந்தார். அப்போது அவர் ஹிஜாப் அணிந்திருந்த நிலையில், அது என்ன என நிதிஷ் கேட்டார். அந்தப் பெண் ஹிஜாப் எனச் சொல்லவே.. அதை அகற்றுமாறு நிதிஷ் கூறினார். அத்தோடு நிற்காமல் அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்து ஹிஜாப்பையும் அவர் அகற்றினார். இதுவே பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் நிதிஷ் மீது தவறில்லை என்றும் தேவையில்லாமல் சிலர் இதைச் சர்ச்சையாக மாற்றுவதாகவும் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். இது தொடர்பாக அவர், "தேவையில்லாமல் இதைச் சர்ச்சையாக்குகிறார்கள். நிதிஷ் ஒவ்வொரு பெண்ணையும் மகளாகவே கருதுவார். எனவே, தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடந்த இந்த விவகாரத்தைச் சர்ச்சையாகப் பார்க்கத் தேவையில்லை" என்றார்.
கண்டிப்பு
நிதிஷ்குமாரின் இந்தச் செயலைப் பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகிறார்கள். குறிப்பாக அண்டை மாநிலமான ஜார்கண்ட்டின் சுகாதார அமைச்சர் இர்பான் அன்சாரி, நுஸ்ரத் பர்வீனுக்கு மாதம் ₹3 லட்சம் சம்பளம், அரசு வீடு, விருப்பமான பணி, முழு பாதுகாப்புடன் வேலை செய்யும் ஒரு வாய்ப்பை வழங்குவதாக அறிவித்தார். நிதிஷ் செயலைக் கண்டித்த அன்சாரி, அது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல.. மனிதக் கண்ணியம், மரியாதை மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நேரடித் தாக்குதல் என்றும் விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications