பீகார்: நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு! நாளை பீகார் முதல்வராக பதவியேற்பு!!
பாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி அழைப்பு விடுத்துள்ளார். பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் நாளை பதவியேற்கிறார்.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்ததை தொடர்ந்து முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு ஆதரவு அளித்த 7 அமைச்சர்களும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பின்னர் புதிய முதல்வராக நிதிஷ்குமாரை கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர். அவரும் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். ஆனால் முதல்வராக இருந்த மஞ்சியும், தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கூறியதால் பீகார் அரசியலில் குழப்பம் நிலவியது.
இந்த நிலையில் பீகார் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று ஆளுநர் உரை நிகழ்த்தி முடித்ததும் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மஞ்சிக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி உத்தரவிட்டு இருந்தார்.
அதை ஏற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டு இருந்த மஞ்சி, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன் மஞ்சி நேற்று காலை திடீரென்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இருப்பினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நேற்று காலையில் பீகார் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால் முதல்வர் மஞ்சி பதவி விலகியதால் சட்டசபையில் ஆளுநர் உரை ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஆளுநர் முதன்மை செயலாளர் அனுப்பிய கடிதத்தை சபையில் வாசித்த சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி, சபையை முதலில் நண்பகல் 12.30 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர் சபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், புதிய அரசு அமைக்க ஆளுநரின் அழைப்புக்காக காத்திருப்பதாக கூறினார்.
சிறிது நேரத்தில் தன்னை வந்து சந்திக்குமாறு ஆளுநரிடம் இருந்து நிதிஷ்குமாருக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்று அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்று கேசரிநாத் திரிபாதியை அரை மணி நேரம் சந்தித்து பேசினார். அவருடன் ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் சென்று இருந்தனர்.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் விடுத்த அழைப்பை ஏற்று புதிய முதல்வராக நாளை மாலை தான் பதவி ஏற்க இருப்பதாக கூறினார்.
மார்ச் 16-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் தம்மைக் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் நிதிஷ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications