பீகார்: இந்து கடவுள்கள் மீது லாலு கட்சி எம்எல்ஏ விமர்சனம்- நாக்கை அறுத்தால் ரூ10 லட்சம் அறிவிப்பு!
பாட்னா: இந்து கடவுள்களை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி (ஆர்ஜேடி) எம்.எல்.ஏ. பதே பகதூர் குஷ்வாஹாவின் நாக்கை அறுத்தால் ரூ10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என இந்துத்துவா அமைப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் காலம் காலமாக மதம், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. தந்தை பெரியார் காலத்தில் இது மிகப் பெரிய மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. இந்த மக்கள் இயக்கத்தின் நீட்சியாகவே திராவிட கட்சிகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளன. 60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள்தான் தமிழ்நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்கிற நிலைமை உள்ளது.

உதயநிதி, ஆ.ராசா பேச்சுகள்: தமிழ்நாட்டில் அண்மையில் சனாதன தர்மம் ஒழிப்பு, மனுஸ்மிருதி குறித்து பேசியதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக மூத்த தலைவர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக வட இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. இதனையே பாஜக, 5 மாநில தேர்தல் பிரசாரத்துக்கான ஆயுதமாகவும் பயன்படுத்தியது.
கடவுள் சரஸ்வதி யார்?: தற்போது வட இந்தியாவின் பீகாரிலும் இந்து கடவுள்களின் கற்பிதங்கள் குறித்து பகிரங்க விவாதங்களை கிளப்பிவிட்டிருக்கிறார் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி எம்.எல்.ஏ. பதே பகதூர் குஷ்வாஹா. இந்து கடவுள் சரஸ்வதியின் பிறப்பு தொடர்பான புராணங்களை சுட்டிக்காட்டி சரஸ்வதியை எப்படி வணங்க முடியும்? சரஸ்வதி குறித்து பாடப் புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றார் குஷ்வாஹா. மனுஸ்மிருதி சொல்லும் 33 கோடி தேவர்கள் எங்கே இருக்கிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கோவில்கள், துர்கா தேவி மீது விமர்சனம்: ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கடவுள் துர்கா தேவி எங்கே இருந்தார்? ஏன் ஆங்கிலேயர்களை அவர் கொல்லவில்லை எனவும் கேள்வி கேட்டிருந்தார் குஷ்வாஹா. அத்துடன் நிற்கவில்லை.. எங்களுக்கு லாலு பிரசாத் யாதவ்தான் கடவுள். ராமர் உள்ளிட்ட கடவுள் பாத்திரங்கள் அனைத்துமே கற்பனை. பிராமணர்கள், மூடநம்பிக்கையை பரப்புகிறவர்கள்; கோவில்கள் என்பவை அடிமை மனநிலையை வளர்த்தெடுப்பவை எனவும் சரமாரியாக விமர்சனங்களையும் நாத்திக கருத்துகளையும் குஷ்வாஹா முன்வைத்து வருகிறார்.
நாக்கை அறுத்தால் ரூ10 லட்சம்: இதனால் இந்துத்துவ அமைப்புகள் கொந்தளித்து போயுள்ளன. இந்து சிவ பவானி சேனா என்ற அமைப்பினர் குஷ்வாஹாவுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அதில், இந்து கடவுள்களை விமர்சித்து வரும் குஷ்வாஹாவின் நாக்கை அறுத்தால் ரூ10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது பரபரபை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications