பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. 160 இடங்களில் போட்டி... இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு அக்டோபர் 12-ந் தேதி முதல்வர் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் நவம்பர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலா 100 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 40 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த சமாஜ்வாடி கூட்டணிக்கு முன்னர் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சி கூட்டணியை விட்டு வெளியேறியது.
பீகாரில் ஆட்சியை எப்படியும் கைப்பற்றுவது என்ற முனைப்புடன் இருக்கும் பாரதிய ஜனதா தலைமையில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, மாஞ்சியின் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, உபேந்திரா குஷாவாவின் ஆர்.எல்.எஸ்.பி. ஆகியவை இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி நீடித்து வந்தது.
இது தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பா.ஜ.க. மேலிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது. பீகாரில் 170 இடங்களில் போட்டியிடுவது என பா.ஜ.க. முடிவு செய்திருந்தது. தற்போது 160 இடங்களில் அக்கட்சி போட்டியிட உள்ளது உறுதியாகி உள்ளது.
உபேந்திரா குஷாவாவின் ஆர்.எல்.எஸ்.பி. 25; பாஸ்வானின் லோக் ஜன சக்தி மற்றும் மாஞ்சியின் அவாமி மோர்ச்சா மொத்தம் 40 இடங்களில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications