Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவீன் பட்நாயக்கிற்கு “கொடுங்கனவாக” மாறிய பாஜக.. முதல் தோல்வி.. 5 முறை முதல்வர் ஆட்சியை இழந்தார்!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: 5 முறை தொடர்ச்சியாக ஒடிசா மாநில முதல்வராகப் பதவி வகித்த நவீன் பட்நாயக் ஆட்சியை பறிகொடுத்துள்ளார். முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சியைப் பிடிக்க உள்ளது பாஜக. அதோடு, நவீன் பட்நாயக் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளில் ஒன்றில் தோல்வி அடைந்துள்ளார்.

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தது. ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அங்கு பாஜக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளது.

Odisha election result 2024 Odisha assembly election result 2024 Naveen Patnaik VK Pandian BJP 2024 2024

பாஜக வெற்றி: ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் 1, சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்று உள்ளனர்.

பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) இடையே நேரடி போட்டி நிலவிய நிலையில், பாஜக முந்தியுள்ளது. ஒடிசாவில் ஆட்சியை பிடிக்க 74 சீட்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் தற்போதைய நிலையில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், ஒடிசாவில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பிஜு ஜனதா தளம் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பிஜேடி தலைவர் நவீன்பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். பாஜக 23 இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. காங்கிரஸ் கட்சி 9 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இரும்புக்கோட்டை: ஒடிசா ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத இரும்புக்கோட்டையாக திகழ்ந்தது. தொடர்ச்சியாக பல ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்தது. 1967 தேர்தலில் சுதந்திரா கட்சி ஆட்சிக்கு வந்தது. 1971ல் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகு 1990 வரை அங்கு காங்கிரஸ் ஆட்சியே நடைபெற்றது. பிஜு பட்நாயக், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்து, ஒடிசா மாநில முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். நந்தினி சத்பதி, ஜானகி வல்லப் பட்நாயக் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் முதல்வர்களாக இருந்தனர்.

பின்னர் பிஜு பட்நாயக், ஜனதா தளத்தில் இணைந்தார். 1990ல் பிஜு பட்நாயக்கின் ஜனதா தளம் கட்சி ஒடிசாவில் ஆட்சியை பிடித்தது. பின்னர் 1995ல் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியின் 4 ஆண்டு காலத்தில் 3 முதல்வர்கள் மாறினர். அதன் பிறகு பிஜு பட்நாயக் மறைவுக்குப் பிறகு நவீன் பட்நாயக்கின் ராஜ்ஜியம் தொடங்கியது.

நவீன் பட்நாயக்: ஒடிசா மாநிலத்தின் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த பிஜு பட்நாயக்கின் மகன் தான் தற்போதைய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வந்து பிஜு ஜனதா தளம் கட்சியை தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒடிசா சட்டசபை தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்றது. நவீன் பட்நாயக் முதல்வர் ஆனார். அன்று முதல் தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்து வருகிறார் நவீன் பட்நாயக்.

விகே பாண்டியன்: தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கார்த்திகேயன் பாண்டியன் நவீன் பட்நாயக்கின் வலது கரமாக திகழ்ந்து வருகிறார். தனது கட்சியின் அடுத்த முகமாக விகே பாண்டியனை கொண்டுவர திட்டமிட்ட நவீன் பட்நாயக், அவரை விருப்ப ஓய்வு பெறச் செய்து, கட்சியில் இணைத்துக்கொண்டார். வி.கே. பாண்டியன் இந்த தேர்தலில் தீவிரமாக பணியாற்றினார். பிரச்சாரங்களில் விகே பாண்டியனை குறிவைத்து பாஜக விமர்சித்தது. நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு பாண்டியன் என பாஜகவினர் கூறினர்.

ஒடிசாவை தமிழர் ஆள்வதா என உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்தார். எனினும், விகே பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என மறுத்தார் நவீன் பட்நாயக். விகே பாண்டியனும், ஒடிசாவின் முதல்வராக மண்ணின் மைந்தர் நவீன் பட்நாயக்கே மீண்டும் அமர்வார் எனக் கூறினார். விகே பாண்டியனை குறி வைத்த பாஜகவின் உத்தி தேர்தலில் எதிரொலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

5 முறை முதல்வர்: தொடர்ந்து 6வது முறையாக ஆட்சியைப் பிடிக்க நவீன் பட்நாயக் தயாராகி வந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அவருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. 24 ஆண்டுகளாக ஒடிசாவை ஒரே மனிதர் ஆண்டு வரும் நிலையில், நவீன் பட்நாயக், 6-வது முறையாகத் தொடர்ந்து முதல்வராக அரியணை ஏறினால், நீண்ட காலம் முதலமைச்சராக இருந்துள்ள சிக்கிமின் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையையும் (24 ஆண்டுகள் 165 நாட்கள்) முறியடிப்பார் என்ற நிலை இருந்தது.

ஒடிசாவில் பாஜக 76 இடங்களில் முன்னிலை.. பிஜேடி 54 சீட் மட்டுமே.. ஆட்சியை இழக்கிறார் நவீன் பட்நாயக்!


முதல் தோல்வி: ஆனால், நவீன் பட்நாயக்கை 6வது முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்க முடியாமல் செய்துள்ளது பாஜக. நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், ஹிஞ்சிலி தொகுதியில் அவர் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். மற்றொரு தொகுதியான காந்தபாஞ்சியில் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார் நவீன் பட்நாயக்.

நவீன் பட்நாயக்கின் பிஜேடி கட்சியை தோற்கடித்து, ஒடிசாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக. 5 முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் பிஜு ஜனதா தளத்தை வீழ்த்தி முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக.

கட்சி தொடங்கிய ஓரிரு வருடங்களிலேயே ஒடிசாவில் ஆட்சியை பிடித்த நவீன் பட்நாயக், அதன் பிறகு தோல்வியையே சந்திக்கவில்லை. தொடர்ச்சியாக வெற்றி பெற்று 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்தார். இந்நிலையில், தான் போட்டியிட்ட 2 தொகுதிகளில் ஒன்றில் தோற்றுள்ளதோடு, ஆட்சியையும் பறிகொடுத்துள்ளார் நவீன் பட்நாயக்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+