நீதி கேட்ட மாணவர்களை அடித்து விரட்டிய போலீஸ்! மமதா அரசைக் கண்டித்து இன்று பந்த்! நிலைமை எப்படி?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலையைக் கண்டித்து மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் அங்குள்ள மாநில அரசைக் கண்டித்து பாஜக இன்றைய தினம் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் கொல்கத்தா போலீசாரின் செயல்பாடுகள் விமர்சனத்தைக் கிளப்பிய நிலையில், வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே உண்மையான குற்றவாளிகளைக் காக்க திரிணாமுல் அரசு முயல்வதாகவும் இதனால் மம்தா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அம்மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
குறிப்பாக அங்குள்ள மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன்படி மம்தா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்காக சுமார் 10 கிமீ தூரம் பேரணியாகப் புறப்பட்ட மாணவர்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி வந்தனர்.
போராட்டத்திற்கு அம்மாநில அரசு அனுமதி தராத நிலையில், இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ரயில்வே தண்டவாள கற்களை எடுத்த போராட்டக்காரர்கள் அதை போலீசார் மீது வீசினர். போராட்டக்காரர்களைக் கலைந்து போக போலீசார் எச்சரித்த போதும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் சரமாரியாகத் தடியடி நடத்தினர். மேலும், தண்ணீரைப் பீய்ச்சியும் அவர்களைக் கலைக்க முயன்றனர். மேலும் கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டது.
மம்தா அரசின் இந்த செயல் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பாஜக, தற்போது நேரடியாக போராட்டத்தில் குதித்து இருக்கிறது. மருத்துவக் கல்லூரி கொலை வழக்கில் மேற்கு வங்க அரசை கண்டித்தும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் இன்று 12 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 12 மணி நேரம் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்திருக்கிறது.
இதை அடுத்து பல இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மருந்தகங்கள், பால், காய்கறி வண்டிகளை தடுக்க வேண்டாமென பாஜக தலைமை கூறியுள்ளது.
என்ன பிரச்சினை? : மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது. இதனையடுத்தே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications