அரசியல்வாதிகள் 60 வயதுக்கு மேல் ஓய்வு பெற வேண்டும்.. அமித்ஷா பேச்சால் பெரும் சர்ச்சை
டெல்லி: அரசியல்வாதிகள் 60 வயதுக்கு மேல் ஓய்வு பெற வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பேசிய பேச்சால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க.வில் இருந்து மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் ஓரம்கட்டப்பட்டனர். பின்னர் பா.ஜ.க.வில் வழிகாட்டும் குழு என ஒன்றை நியமித்து அதிகாரப்பூர்வமாக அவர்கள் ஒதுக்கிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைய இந்த ஒதுக்கிவைக்கப்பட்ட மூத்த தலைவர்கள் கட்சித் தலைவரான அமித்ஷாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இது பா.ஜ.க.வில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே உத்தரப்பிரதேசத்தில் மறைந்த ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் நானாஜி தேஷ்முக் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமித்ஷா, அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் மிகச் சிறந்த முன்னுதாரணமாக விளங்கியவர் நானாஜி. 60 வயதை எட்டிவிட்டாலே அரசியலில் இருந்து ஒதுங்கிவிட வேண்டும். அதற்குப் பிறகு கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும். இதற்கு நானாஜிதான் உதாரணம் என்று பேசினார்.
60 வயதுக்கு மேல் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று அமித்ஷா கூறியது, அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோரைத்தான் எனக் கூறி அக்கட்சிக்குள் மீண்டும் பஞ்சாயத்து வெடித்தது.
அமித்ஷாவின் பேச்சை சுட்டிக்காட்டி உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம்கான், அப்படியானால் பிரதமர் மோடியும் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி அமித்ஷா பேச்சு தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது.
அதில், நானாஜி வாழ்க்கையின் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகத்தான் அமித்ஷா அப்படி பேசினார்.. ஊடகங்கள் அதை திரித்து வெளியிட்டுள்ளன என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications