மே.வங்கத்தை 2ஆக பிரியுங்கள்.. டார்ஜிலிங்கை மையமாக கொண்டு தனி மாநிலம் தேவை.. பாஜக எம்எல்ஏ பரபர கடிதம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தைத் தனியாகப் பிரித்து, டார்ஜிலிங்கை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுடன் மேற்கு வங்கத்திலும் கடந்த மார்ச் - ஏப்ரல் காலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது, இதில் மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என பாஜக கடுமையாக முயன்றது.
இருப்பினும், அத்தேர்தலில் பாஜகவால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற முடியவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. அக்கட்சித் தலைவர் மம்தா 3ஆவது முறையாக முதல்வரானார்.

திரிணாமுல் காங்கிரஸ்
அதன் பின்னரும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையேயான மோதல் போக்கு குறையவில்லை. பாஜகவைத் தொடர்ந்து விமர்சித்து வரும் மம்தா பானர்ஜி, பல்வேறு மாநிலங்களிலும் திரிணாமுல் காங்கிரஸை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. மேலும், தேசியளவில் பாஜகவுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியிலும் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியுள்ளது.

தனி மாநிலம்
இந்தச் சூழலில் மேற்கு வங்கத்தில் இருந்து டார்ஜிலிங்கை தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குர்சியோங்கின் பாஜக எம்எல்ஏ பிஷ்ணு பிரசாத் சர்மா அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிஷ்ணு பிரசாத் சர்மா எழுதியுள்ள கடிதத்தில் இந்த பிரச்சினை தொடர்பாக நிரந்தர அரசியல் தீர்வைக் காணப்படும் என பாஜக தலைமை வாக்குறுதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக எம்எல்ஏ
இது தொடர்பாக பிஷ்ணு பிரசாத் சர்மா கூறுகையில், "மாநில உரிமை தொடர்பாகப் பல வன்முறை கண்ட மலைப்பகுதி மக்கள் மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. இது தொடர்பாக நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று நான் கட்சியின் தேசியத் தலைவருக்குக் கடிதம் எழுதினேன். இந்த வாக்குறுதி காரணமாகவே பொதுமக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர்.

தீர்வு தேவை
மலை பகுதியில் வாழும் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு என்பது மேற்கு வங்கத்தின் பிடியில் இருந்து விடுபடுவதாகு. அது ஒரு தனி மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ இருக்கலாம். எனது இந்த கோரிக்கையும் மேற்கு வங்க பாஜக தலைவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள், மலைப் பகுதியில் வாழும் மக்களுடன் உட்கார்ந்து பேசி தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும்" என்றார்.

பாஜக எம்பி
முன்னதாக அலிபுர்துவார் பாஜக எம்பி ஜான் பர்லாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களை எல்லாம் தனியாகப் பிரித்துத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திரிணாமுல் தலைவர்கள், பாஜக பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகச் சாடியிருந்தனர்.

திரிணாமுல் தலைவர்கள்
இது தொடர்பாக திரிணாமுல் தலைவர்கள் கூறுகையில், "மேற்கு வங்கத்தைப் பிரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகப் பிரிவினைவாதத்தைச் செய்ய பாஜக சதி செய்து வருகிறது. ஆனால் அவ்வாறு நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், மேற்கு வங்க பாஜக தலைமை இதில் என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பதைப் பொதுமக்களிடம் கூற வேண்டும்" எனக் கடுமையாகச் சாடியுள்ளனர்,

கூர்க்காலாந்து இயக்கம்
மேற்கு வங்கத்தில் வடமாவட்டங்களைத் தனியாகப் பிரித்து கூர்க்காலாந்து எனத் தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை 1980களில் தொடங்கியது. அப்போது சுபாஸ் கிசிங் தலைமையிலான குழு இறங்கிய வன்முறைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், இதைத் தொடர்ந்து 1988இல் டார்ஜிலிங் கோர்க்கா ஹில் கவுன்சில் உருவாக்கப்பட்டது.

ஏன் முக்கியம்
2011இல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததும், கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகம் (ஜிடிஏ) உருவாக்கப்பட்டது. ஆனால் 2013 இல் கூர்க்காலாந்து தனி மாநில பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. திரிணாமுல் அரசு கோர்க்கா அடையாளத்தை அழிக்க முயல்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். அதேநேரம் இந்த 8 வடமாவட்டங்கள் மேற்கு வங்கத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக டார்ஜிலிங் பகுதியில் தேயிலைத் தோட்டம் தொடங்கி சுற்றுலா வரை பல வழிகளில் வருமானம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications