பீகார் தேர்தல் தோல்வி குறித்து பா.ஜ.க. நாடாளுமன்ற குழு கூட்டம் ஆய்வு
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வி அடைந்தது குறித்து டெல்லியில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்ற குழு கூடி விவாதித்தது.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 58 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி 178 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பீகார் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, ஒரு மாத காலத்துக்கும் அதிகமாக பீகாரிலேயே டேரா போட்டு தேர்தல் வேலை பார்த்தார். ஆனால் பா.ஜ.க. அணிக்கு எதுவும் கை கொடுக்கவில்லை.
அத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஸ்வானின் லோக் ஜனசக்தி, மாஞ்சியின் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, குஷாவவாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகள் மிக மோசமான தோல்வியையே தழுவின. இந்த தோல்விக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான பேச்சு; தலித் குழந்தைகள் எரிக்கப்பட்ட போது நாய்களோடு ஒப்பிட்டு மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் பேசியது போன்றவை முதன்மையான காரணிகளாக கூறப்படுகிறது.
இருப்பினும் பீகார் தேர்தலில் வெளுத்து வாங்கிய நிதிஷ் அலையால் மோடி அலை என்பது காலவாதியாகிவிட்டது. இந்த தேர்தல் தோல்வி குறித்து பா.ஜ.கவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று கூடி ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வி அடைந்தது குறித்து டெல்லியில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்ற குழு கூட்டம் கூடி ஆலோசித்தது.












Click it and Unblock the Notifications