மு.க. அழகிரி ஆதரவளித்தால் ஏற்போம்: பாஜக
டெல்லி: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி ஆதரவளித்தால் ஏற்போம் என்று பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதர்ராவ் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் முரளிதர்ராவ் கூறியதாவது:

தமிழ்நாட்டில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பின்பு மாநிலத்தில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. தற்போது அ.தி.மு.க. ஒரு துருவமாகவும், தி.மு.க. இன்னொரு துருவமாகவும், மூன்றாவது முக்கிய துருவமாக பா.ஜனதாவும் போட்டியிடுகின்றன.
தமிழக மக்களும், மத்தியில் காங்கிரசுக்கு உண்மையான மாற்றாக பாரதிய ஜனதாவை பார்க்கின்றனர். தமிழகத்தில் போட்டி என்பது 3 அணிக்கும் சமமாகவே இருக்கும்.
இத் தேர்தலில் தி.மு.க.வை ஆட்சிமாற்றம் நிகழ்த்தும் கட்சியாக தமிழக மக்கள் பார்க்கவில்லை. அது பலவீனமான கட்சியாகவே இருக்கிறது.
தேர்தலுக்கு பின்பு அ.தி.மு.க. அல்லது தி.மு.க.வுடன் பா.ஜனதாவுக்கு உறவு ஏற்படுமா? என்ற கேள்வியை இப்போது விவாதிப்பது சரியல்ல. நிச்சயம் பாரதிய ஜனதா கூட்டணி தேர்தலில் ஆட்சி அமைக்கும் வகையில் எம்.பி.க்களை பெறும்.
தேர்தலுக்கு முன்பு நமக்கு ஆட்சியமைக்க தேவைப்படும் வெற்றி கிடைக்குமா? என்பது குறித்து நாங்கள் விவாதித்தோம். ஆனால் தற்போது நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியால் நிச்சயம் ஆட்சியமைக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
எனவே தேர்தலுக்கு பின் வேறு யாருடனும் கூட்டணி அமைக்கத்தேவை இருக்காது. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் அதிருப்தியாளர்கள் ஆதரவு கிடைத்தால் அது சாதகமாக அமையும். மு.க.அழகிரியின் ஆதரவு கிடைத்தால் அதனை வரவேற்போம். அது நாங்கள் ஆட்சி அமைக்க உதவும்
இவ்வாறு முரளிதர்ராவ் கூறினார்.


Click it and Unblock the Notifications
