பரிதாபத்தில் காங்கிரஸ்.. ராஜஸ்தானில் 7ல் 3 தொகுதிகளில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட ‛கை’.. பாஜக மாஸ்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்து. இதில் 5 இடங்களில் பாஜக வென்ற நிலையில் காங்கிரஸ் ஒரு சீட்டில் மட்டுமே வெற்றி பெற்றது. அதோடு சுயேச்சை உள்பட ஆதிவாசி கட்சியை சேர்ந்தவர்கள் இணைந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 3 பேரை 3ம் இடத்துக்கு தள்ளினர்.
ராஜஸ்தானில் கடந்த 2018 முதல் 2023 வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அசோக் கெலாட் முதல்வராக இருந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.

மொத்தம் 200 தொகுதிகள் உள்ளது. இதில் தனித்து ஆட்சியை பிடிக்க 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 115 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 70 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதனால் ஆட்சி மாற்றம் நடந்தது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில முதல்வராக பாஜகவின் பஜன் லால் சர்மா பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். அதன்பிறகு ராஜஸ்தானில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாகின. இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து முடிந்தது. இந்த 7 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், பாரத் ஆதிவாசி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதிகளில் வென்றுள்ளது. இதில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. நேற்று வெளியான 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வருமாறு:
* ஜூன்ஜூன் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் ராஜேந்திரா பாம்போ 42 ஆயிரத்து 848 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 90 ஆயிரத்து 425 ஓட்டுகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அமித் ஒலா 47,577 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.
* ராம்கார்க் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சுக்வாந்த் சிங் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 811 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யன் ஜூபேர் 95 ஆயிரத்து 175 ஓட்டுகள் பெற்றார். இதனால் சுக்வாந்த் சிங் 13,636 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆர்யன் ஜூபேரை வீழ்த்தினார்.
* தியோலி - யுனியாரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ராஜேந்திர குர்ஜார் மொத்தம் 1 லட்சத்து 599 ஓட்டுகள் பெற்றார். இதனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனா 59 ஆயிரத்து 478 ஓட்டுகள் பெற்றார். இதனால் பாஜகவின் ராஜேந்திர குர்ஜார் 41,112 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கஸ்தூர் சந்த் மீனா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அவர் மொத்தம் 31,385 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தார்.
* கின்வ்சார் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் ரேவந்த் ராம் தங்கா ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 628 ஓட்டுகள் பெற்று 13 ஆயிரத்து 901 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் ராஷ்டரிய லோக்தந்திரிக் கட்சி வேட்பாளர் கனிகா பெனிவால் 94,727 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ரத்தன் சவுத்ரி வெறும் 5,454 ஓட்டுகள் பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
* சாலம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவினர் சாந்தா அம்ரித் லால் மீனா மொத்தம் 84,428 ஓட்டுகள் பெற்று 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு பாரதி ஆதிவாசி கட்சி வேட்பாளர் ஜிதேஸ் குமார் கட்டாரா 83,143 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரேஷ்மா மீனா 26,760 ஓட்டுகளுடன் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
* தவுசா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தீன் தயாள் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 75,536 ஓட்டுகள் பெற்று 2,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட் பாஜக வேட்பாளர் ஜக் மோகன் 73,236 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.
* சோராசி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வீழ்த்தி பாரத் ஆதிவாசி கட்சி வெற்றி பெற்றது. பாரத் ஆதிவாசி கட்சியை சேர்ந்த அனில் குமார் கட்டாரா 89,161 வாக்குகள் பெற்று வென்றார். இவர் பாஜக வேட்பாளர் கரிலாலை (பெற்ற வாக்குகள் 64,791) 24,370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் ரோட் 15,915 ஓட்டுகள் பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.












Click it and Unblock the Notifications