கருப்பு பண விவகாரம்... மார்ச் 31ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை வைத்திருப்பதாக ஒப்புதல் அளித்துள்ளவர்கள் மீது மார்ச் 31 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் முறைகேடாக பணம் பதுக்கி வைத்துள்ளனர். இது உலகறிந்த ரகசியம். இந்த நிலையில் இந்த வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அந்த வழக்கின் அடிப்படையில் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசு உயர்மட்ட கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு 16 பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் தாக்கல் செய்துள்ளது.
அதில் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக தாபர் இந்தியா குழுமத்தின் முன்னாள் இயக்குனரான பிரதீப் பர்மன், கோவாவை சேர்ந்த சுரங்க நிறுவன அதிபரான ராதா சதீஷ் டிம்லோ, குஜராத்தை சேர்ந்த பிரபல தங்க வியாபாரி சிமன்லால் லோகியா உள்பட 627 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
அப்போது, வருகின்ற மார்ச் மாதத்திற்குள் வெளிநாடுகளில் கருப்பு பணத்தை வைத்துள்ளதாக ஒப்புக்கொண்டவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து அந்த பணத்தை மீட்க வேண்டும் என மனுதாரரான ராம்ஜெத்மலானி வாதிட்டார். இல்லாவிட்டால் அவர்கள் தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு, பதிலளிக்கும் விதமாக, ‘அரசாங்கத்திடம் இந்த விஷயம் குறித்து அனைத்து தகவல்களும் இருக்கிறது என்றும், மார்ச் மாதத்திற்குள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என அரசுத்தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல்ரோகத்கி கூறினார்.
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக உரிய காலத்துக்குள் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து முடிக்கவில்லை என்றால் அரசாங்கம் இதுகுறித்து சட்டரீதியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் அல்லது அந்த நடவடிக்கையை எடுப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications