கிராம மக்கள் மீது எல்லை பாதுகாப்பு படை துப்பாக்கிச்சூடு: 2 பேர் சாவு, 12 பேர் காயம்
திரிபுரா: திரிபுரா மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையினருக்கும், உள்ளூர் கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் படுகாயமடைந்தனர்.
திரிபுரா மாநிலத்தில், இந்திய-வங்கதேச எல்லைப்பகுதியில் உள்ள தெற்கு ராம்நகர் கிராம பகுதியில், எல்லை பாதுகாப்பு படையினர் நேற்றிரவு ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, கடத்தல்காரர்கள் சிலர் அவ்வழியாக தப்பிப்போவதை பார்த்து அவர்களை சரணடையுமாறு வீரர்கள் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பியோட முற்பட்டனர். இதற்கு உதவியாக கிராம மக்களும், எல்லை பாதுகாப்பு படையினரை உருட்டு கட்டைகளாலும், கற்களாலும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து , வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்பு படையினர் எச்சரிக்கைவிடுத்தனர். இதையும் மீறி தாக்குதலை மக்கள் தொடர்ந்ததால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இஸ்மாயில் மியா என்ற கிராமவாசி கொல்லப்பட்டார். கிராம மக்கள் தாக்கியதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணமடைந்தார். இந்த தாக்குதலில் மொத்தம் 12பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து கூடுதல் படைகள், எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
