உ.பி.: பெற்றோர் கண் முன்பே தற்கொலை செய்து கொண்ட சிஏ மாணவர்
காசியாபாத்: உத்தர பிரதேசத்தில் சிஏ தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வாங்கியதால் பெற்றோர் திட்டியதை பொறுத்துக்கொள்ள முடியாமல் 21 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் ராகுல்(21). சிஏ படித்துக் கொண்டிருந்தார். சிஏ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக அவரை அவரது பெற்றோர் நேற்று திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டைவிட்டு வெளியேறினார்.
இதையடுத்து ராகுலின் தந்தை ராஜேஷ் பாலி அவருக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு கேட்டுள்ளார். அதற்கு ராகுல் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ராகுலின் பெற்றோர் அவரை சமாதானம் செய்ய முயன்றும் பயனில்லை.
உடனே அவர்கள் காசியாபாத் ரயில் நிலையத்திற்கு ஓடினர். அங்கு ராகுல் தண்டவாளத்தில் படுத்திருப்பதைப் பார்த்து அவரைக் காப்பாற்ற ஓடினர். ஆனால் அதற்குள் அந்த வழியாக வந்த ரயில் ஏறி ராகுல் அவரது பெற்றோரின் கண் முன்பே பரிதாபமாக உயிர் இழந்தார்.
போலீசார் ராகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications