உச்ச நீதிமன்றத்திற்கே உத்தரவு பிறப்பிப்பு..பரபரப்பை ஏற்படுத்திய கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி
கொல்கத்தா: தன் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டிருப்பது நீதித்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு பெரும் தலைவலியாக இந்த முறைகேடு விவகாரம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த முறைகேடு புகார் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதன்படி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகிறது.
ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் இந்த முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தொடர்பான வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அபிஜித் கங்கோபாத்யாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இத்தகைய சூழலில், நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அதில், அவர் தெரிவித்த கருத்துக்கள் மேற்கு வங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் அளித்த பேட்டி தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின்படி பதிவாளரும் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கை வேறொரு நீதிபதி அமர்வுக்கு மாற்றுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு நேற்று உத்தரவிட்டு இருந்தது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது அது தொடர்பாக நீதிபதிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்து இருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அதாவது, தனது பேட்டி தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை உள்ளிட்ட விவரங்களை கொல்கத்தா உயர் நீதிமன்ற பதிவாளரின் பிரமாண பத்திரம் ஆகியவற்றின் அசல் வடிவங்களை தனக்கு முன் நள்ளிரவு 12 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற செயலாளருக்கு உத்தரவிட்டார்.
வெளிப்படைத்தன்மைக்காக இந்த நடவடிக்கை அவசியம் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். உச்ச நீதிமன்றத்திற்கே உயர் நீதிம்ன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு நீதிமன்ற வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று இரவு 8 மணிக்கு இந்த விவகாரத்தை விசாரித்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. உச்ச நீதிமன்ற அதிகாரிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பிப்பது நீதித்துறையின் ஒழுக்கம் என்ற பார்வையில் முறையானது அல்ல என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications