ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற எங்களுக்கு அதிகாரம் இல்லை: கர்நாடக முதல்வர்
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள ஜெயலலிதாவை கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மாற்ற இயலாது. அதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சித்தராமையா.
18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது. தீர்ப்பை அடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் ஜெயலலிதா.

இதனால் பெரும்பான்மையான அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனு பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகரா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு சரியானதே எனக் கூறி, ஜாமீன் மனுவை நிராகரித்தார்.
இதற்கிடையே, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றலாம் என முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட தலைவர்கள் யோசனை தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக நேற்று பெங்களூரில் அம்மாநில முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலில், ‘உச்சநீதிமன்ற உத்தரவுப் படியே ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது. எனவே, ஜெ.வை தமிழகத்திற்கு மாற்றும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications