பெங்களூர் மக்கள் மீது கன்னட விவசாயிகள் கோபம்.. கத்தி பட பாணியில் குடிநீரை கட் செய்ய ஆவேசம்
மண்டியா: காவிரி பிரச்சனையில் பெங்களூர் மக்கள் வீதியில் இறங்கி போராடாததால் காவிரி நீரை நிறுத்த வலியுறுத்தி மண்டியாவில் குடிநீரேற்று நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மண்டியா, சாம்ராஜ்நகர், மைசூர் பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்டியாவில் இன்று முழு அடைப்புப் போராட்டமும் நடைபெறுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரைக் கூட திறக்கவே கூடாது என்பது கர்நாடகா விவசாயிகளின் கோரிக்கை. இதற்காக பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காவிரி பிரச்சனையில் தங்களைப் போல பெங்களூர் நகர மக்கள் வீதிகளில் இறங்கி போராடவில்லை என்கிற கோபத்தை மண்டியா விவசாயிகள் வெளிப்படுத்தி உள்ளனர். மண்டியா மலவள்ளி வட்டம், தொடேகாடனஹள்ளி என்ற இடத்தில் காவிரியில் இருந்து பெங்களூர் நகரத்துக்கு குடிநீரை அனுப்பும் நீரேற்றும் நிலையம் அமைந்துள்ளது.
தொடேகாடனஹள்ளி நீரேற்று நிலையத்தை நேற்று கன்னட பாதுகாப்பு சேனா உள்ளிட்ட் பல்வேறு கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டனர். பெங்களூர் நகரத்துக்கு குடிநீர் வழங்குவதை உடனே நிறுத்த வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்தினர். இந்த முற்றுகைப் போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினருக்கும் போலீசாருக்கும் லேசான மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் கூறுகையில், பெங்களூர் நகரில் பல்வேறு மாநில மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் குடிப்பதும் இந்த காவிரி நீரைத்தான். காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிடக் கூடாது என மண்டியா, மைசூர், சாம்ராஜ்நகரில் தீவிரமாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் பெங்களூர் நகர மக்கள் போராடாமல் இருக்கின்றனர். பெங்களூர் நகர மக்கள் காவிரி நதிநீர் பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொள்ள மறுத்து அமைதியாக இருப்பதை ஏற்க முடியாது. ஆகையால் குடிநீர் விநியோகத்தை நிறுத்திவிட்டால் பெங்களூர் மக்களுக்கு நிலைமை என்ன என புரிந்துவிடும் என எச்சரித்தனர்.
இதனிடையே தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசின் உருவபொம்மை ஒன்றையும் அவர்கள் எரித்தனர். இதனால் தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து எல்லைகளில் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டனர். இன்று மண்டியா பந்த் நடைபெறும் நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications