காவிரி: தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டம்- ஒக்கலிகா மடாதிபதி ஆதரவு- பாஜக ஹேப்பி- காங். ஷாக்!
மண்டியா: காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவின் மண்டியாவில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஒக்கலிகா கவுடா ஜாதியினரின் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தா சுவாமிகள் ஆதரவு தெரிவித்துள்ளது ஆளும் காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேநேரத்தில் பாஜகவினர் மகிழ்ச்சி மோடில் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. தமிழ்நாடு 24,000 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த் வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

காவிரி போராட்டம்: ஆனால் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரையும் தரவே கூடாது என்பதில் கன்னட விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்தப் போராட்டத்தை கர்நாடகா மாநில பாஜகதான் முதன் முதலில் தொடங்கி வைத்தது. கர்நாடகாவின் மண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர், பெங்களூர் என காவிரி சார்ந்த பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் தொடருகின்றன. மண்டியாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
ஒக்கலிகா மடாதிபதி ஆதரவு: இந்நிலையில் கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான ஒக்கலிகா கவுடா மடாதிபதி நிர்மலானந்தா சுவாமிகள், தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால் தாம் பிரதமர் மோடியிடம் பேச தயார் எனவும் நிர்மலானந்தா சுவாமிகள் கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆதரவு ஒக்கலிகா: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற ஒக்கலிகா கவுடா வாக்குகள் மிக முக்கியமான காரணம். கர்நாடகா காங்கிரஸ் தலைவரும் மாநில துணை முதல்வருமான டிகே சிவகுமார், ஒக்கலிகா கவுடா ஜாதியை சேர்ந்தவர். அவருக்கு அந்த ஜாதி முழு ஆதரவை தந்தது. இதனாலேயே தேவகவுடா குடும்பத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கடந்த காலங்களைப் போல ஒக்கலிகா வாக்குகளைப் பெற முடியாமல் போனது. பாஜகவும் எத்தனையோ முறை ஒக்கலிகா வாக்குகளைப் பெற போராடிப் பார்த்தது. ஆனால் ஒர்க் அவுட் ஆகவில்லை.
காங்கிரஸுக்கு நெருக்கடி- பாஜக ஹேப்பி: அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் தற்போதைய காவிரி நதிநீர் போராட்டம் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. கன்னட விவசாயிகள், கன்னட இன அமைப்புகள் என அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு காங்கிரஸ் அரசுக்கு எதிராக திரண்டு போராடுகின்றன. இந்த வரிசையில் காங்கிரஸை ஆதரிக்கும் ஒக்கலிகா மடாதிபதியும் காவிரி போராட்டத்தில் இணைந்திருப்பதுதான் அக்கட்சியினருக்கு அதிர்ச்சியளித்திருப்பதாக கூறப்படுகிறது. ஒக்கலிகா கவுடா ஜாதியினர், மடாதிபதிகளின் பேச்சுகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறவர்கள். அதனால்தான் காங்கிரஸ் அதிர்ந்து போயிருக்கிறதாம். ஆனால் ஒக்கலிகா கவுடா ஜாதியினர் அப்படியே பாஜக திரும்பிவிட்டால் மகிழ்ச்சிதான் என இலவு காத்த கிளியாக காத்திருக்கிறார்களாம்!












Click it and Unblock the Notifications