மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மதுபான ஊழல்! ரூ.2000 கோடியாம்! மாஜி முதல்வரின் மகன் பிறந்த நாளன்று கைது
டெல்லி: சட்டவிரோத மதுபான ஊழல் வழக்கில், சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சைதன்யா பாகல் இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையால் அங்குச் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபான ஊழல் விவகாரம் இப்போது நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. டெல்லியில் இந்த விவகாரத்தில் தான் கெஜ்ரிவால் தொடங்கிப் பல தலைவர்கள் சிறையில் இருக்க வேண்டி இருந்தது. பல மாநிலங்களிலும் வரிசையாக மதுபான ஊழல் விவகாரம் வெடித்து வருகிறது. அதன்படி இப்போது சத்தீஸ்கரிலும் இது பெரிய விஷயமாக மாறி இருக்கிறது.

ரூ.2000 கோடி ஊழல்
சைதன்யா பாகல் ரூ.2,160 கோடிக்கும் அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோதமாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே சத்தீஸ்கரின் முன்னாள் வணிக மற்றும் வரிகள் துறை அமைச்சர் கவாசி லக்மா கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்தச் சூழலில் தான் இப்போது சைதன்யா பாகலும் கைது செய்யப்பட்டுள்ளார். லக்மா, மதுபான விற்பனை மோசடியில் ஒவ்வொரு மாதமும் பெரிய தொகையை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
புகார் என்ன
உள்ளூர் மது பிராண்டுகளை அரசு மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்ய இதுபோல பணம் வாங்கி வாங்கி இருக்கிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அரசு போகவில்லையாம். மாறாக முழுவதும் மதுபானக் கும்பலுக்குச் சென்றதாக அமலாக்கத் துறை ED குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் மதுபானங்களைக் கொள்முதல் செய்ய லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்த முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மதுபான ஊழல் குறித்து விசாரணை நடத்த சைதன்யா பாகலை விசாரிக்க போலீசார் முயன்றுள்ளனர். ஆனால், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதைக் கண்டித்து போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால், அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
சோதனை
துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாயில் இருக்கும் பாகலின் குடும்ப வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. முன்னதாக, இதே வீட்டில் மஹாதேவ் சூதாட்டச் செயலி மோசடி தொடர்பாகவும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வழக்கிலும் பூபேஷ் பாகல் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.
பிறந்த நாளன்று கைது
கைது குறித்து பூபேஷ் பாகல் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது மகனுக்குப் பிறந்தநாள் பரிசளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றி" என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், "மோடியும், அமித் ஷாவும் கொடுக்கும் பிறந்தநாள் பரிசை எந்த ஜனநாயக நாட்டிலும் யாரும் கொடுக்க முடியாது. எனது பிறந்தநாளில், எனது ஆலோசகர் மற்றும் இரண்டு சிறப்பு அதிகாரிகளின் வீட்டிற்கு அமலாக்கத் துறை அதிகாரிகளை அனுப்பினர்.
இப்போது என் மகன் சைதன்யாவின் பிறந்தநாளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் என் வீட்டில் சோதனை நடத்துகிறார்கள். இந்தப் பரிசுகளுக்கு நன்றி. இதை நான் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்," என்று பதிவிட்டுள்ளார். சத்தீஸ்கரில் இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் இந்தக் கைதைக் கண்டித்து அங்கு அமளியில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications