ஓபிஎஸ்ஸை பின்னுக்கு தள்ளிய ரஜினிகாந்த்.. சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையை கவனிச்சீங்களா
அமராவதி: ஆந்திரா முதல்வராக 4வது முறையாக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவின்போது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்துக்கு மேடையில் முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பின்னுக்கு தள்ளப்பட்டார்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடந்தது. இதில் ஆளும் கட்சியாக தனித்து களமிறங்கிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் கூட்டணியை வீழ்த்தி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் + நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா + பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் ஆந்திராவில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. மாறாக ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலைக்கு ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி பரிதாப நிலையில் உள்ளது.
இதையடுத்து விஜயவாடாவில் நடந்த விழாவில் இன்று காலை 11.27 மணிக்கு ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைக்க உள்ளார். இதன்மூலம் 4வது முறையாக சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராகி உள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜேபி நட்டா, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முன்னாள் முதல்வர் ஒ பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சிரஞ்சீவி உள்பட பலர் பங்கேற்றனர். பதவியேற்ற பிறகு விழா மேடையில் சந்திரபாபு நாயுடுவுக்கு பூங்கொத்து கொடுத்து பிரதமர் மோடி வாழ்த்தினார். அதன்பிறகு இருவரும் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இந்த பதவியேற்பு விழாவில் தற்போது நடந்த ஒரு விவகாரம் பேசுபொருளாகி உள்ளது. அதாவது சந்திரபாபு நாயுடு பதவியேற்றபோது முன்வரிசையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. இதில் ஆளுநர் அப்துல் நசீர், சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜேபி நட்டா, அமித்ஷா, வெங்கய்யா நாயுடு ஆகியோர் ஒருபுறம் அமர்ந்திருந்தனர். அதேபோல் முன்வரிசையில் நடிகர்கள் பவன் கல்யாண், சிரஞ்சீவி, பாலய்யா, ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் அமர்ந்திருந்தனர்.
ஆனால் தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு பின்னால் ஓ பன்னீர் செல்வத்துக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. இதுதான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் ரஜினிக்கும், அவரது மனைவிக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்வரிசையில் சீட் வழங்கப்பட்டுள்ளதே என சிலர் கவலை தெரிவித்தனர்.
அதேவேளையில் இன்னொரு தரப்போ நடிகர் ரஜினிகாந்த், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருங்கிய நண்பர். ஆனால் ஓ பன்னீர் செல்வம் அப்படியில்லை. அவர் தற்போது முதல்வர் பதவியிலும் இல்லை. இதனால் தான் பின்வரிசையில் சீட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications