சத்தீஸ்கர் தேர்தல்: 53 வேட்பாளர்களுடன் 2-வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்- வெடித்தது கலகம்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்கான 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று காங்கிரஸ் வெளியிட்டது. சத்தீஸ்கர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாத சிட்டிங் எம்.எல்.ஏ. அனூப் நாக் தாம் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பதால் கலகம் வெடித்துள்ளது.
90 தொகுதிகளைக் கொண்டது சத்தீஸ்கர் சட்டசபை. இத்தொகுதிகளில் 2018-ல் 68 இடங்களில் வென்றது காங்கிரஸ். பாஜகவுக்கு 15 இடங்கள்தான் கிடைத்தன. ஜேசிசி(ஜே), பகுஜன் சமாஜ் கட்சிகள் மொத்தம் 7 இடங்களில் வென்றன. தற்போது சத்தீஸ்கர் சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

இரு கட்டங்களாக தேர்தல்: தற்போது சத்தீஸ்கர் சட்டசபைக்கு நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் பெரும்பாலும் இம்மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றே தெரிவித்துள்ளன.
2-வது வேட்பாளர்கள் பட்டியல்: இதனிடையே சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 30 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. தற்போது 2-ம் கட்டமாக 53 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.
छत्तीसगढ़ में होने वाले विधानसभा चुनाव, 2023 के लिए भारतीय राष्ट्रीय कांग्रेस द्वारा जारी उम्मीदवारों की सूची। pic.twitter.com/mhmgy8Wzzw
— Congress (@INCIndia) October 18, 2023
விஐபி வேட்பாளர்கள்: ராய்ப்பூர் நகரம் மேற்கு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. விகாஸ் உபாத்யாய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராய்ப்பூர் ரூரல் தொகுதிக்கு பங்கஜ் ஷர்மா, ராய்ப்பூர் நகரம் தெற்கு தொகுதிக்கு மகந்த் ராம் சுந்தர் தாஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சிட்டிங் எம்.எல்.ஏ. அருண் வோரா, துர்க் சிட்டி தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார். ஒருங்கிணைந்த மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரான முதுபெரும் தலைவர் மோதிலால் வோராவின் மகன் அருண் வோரா.
போர்க்கொடி தூக்கிய சிட்டிங் எம்.எல்.ஏ.: இதனிடையே அந்தகார் தொகுதியில் தமக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராததால் சிட்டிங் எம்.எல்.ஏ. அனூப் நாக் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். 2018-ம் ஆண்டு தேர்தலில் அந்தகார் தொகுதியில் பாஜக வேட்பாளரை 13,414 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் அனூப் நாக். இம்முறை தமக்கு காங்கிரஸ் மேலிடம் சீட் தர மறுத்துவிட்டதால் அதே அந்தகார் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார் அனூப் நாக். அந்தகார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ரூப் சிங் போதாய், பாஜக வேட்பாளராக ஏற்கனவே போட்டியிட்டு தோற்ற உசேந்தி ஆகியோர் களத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications