ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் நெல் மணிகள்.. சத்தீஸ்கரில் வினோதம்! ஏன் என்னாச்சு?
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பதை அறிய விவசாயிகள் தங்கள் நெல் மணிகளை அரசுக்கு கொள்முதல் செய்யாமல் வைத்துள்ளார்கள். ஏன் தெரியுமா?
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதற்கான வாக்கு எண்ணிக்கை என்பது இன்று தொடங்குகிறது.

மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட இந்த சட்டசபைக்கு 45 அல்லது 46 இடங்களில் வென்றால் அக்கட்சியே ஆட்சி அமைக்க உரிமை கோரும். இந்த மாநிலமானது மத்திய பிரதேசத்திலிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு உருவானது. இதையடுத்து அந்த ஆண்டு முதலில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சி முதலில் ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் நிர்வாகியும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவருமான அஜித் ஜோகி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவர் 2003 ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். இதையடுத்து 2003 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தது.
பாஜகவை சேர்ந்த ரமான் சிங் முதல்வரானார். இவர் 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வென்று 3 முறை அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தார். இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வென்றது. பூபேஷ் பாகல் முதல்வரானார்.
தற்போது நடந்த தேர்தலின் போது காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் பாஜக ஆட்சியை பிடிக்கவும் போராடின. இன்று தேர்தல் முடிவுகளுக்காக சத்தீஸ்கர் மாநில மக்கள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் என காத்திருக்கும் நிலையில் நெல் மணிகளும் காத்திருக்கும் சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை நெல்களை விவசாயிகளிடம் இருந்து மாநில அரசு கொள்முதல் செய்யும். வழக்கமாக குவிண்டாலுக்கு ரூ 2,640 என விவசாயிகளிடம் மாநில அரசு கொள்முதல் செய்யும். இந்த விலையை உயர்த்தி வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 3200 க்கு கொள்முதல் செய்யும் என தெரிவித்துள்ளது. அது போல் பாஜகவும் குவிண்டாலுக்கு ரூ 3100 வழங்குவதாக தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரில் யார் வென்றாலும் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 560 ரூபாய் அல்லது 460 ரூபாய் கிடைக்கும். இதனால் தேர்தல் முடிவுகள் வந்து புதிய ஆட்சி அமைந்த பிறகுதான் நெல்லை கொள்முதலுக்கு கொடுப்போம் என விவசாயிகள் தெரிவித்துவிட்டனர். ஆட்சி அமைவதற்கு முன்பே கொள்முதலுக்கு அரசுக்கு கொடுத்திருந்தால் விவசாயிகளுக்கு 400 முதல் 500 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு டிவி சேனல்களின் கருத்து கணிப்புகளில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் சத்தீஸ்கரில் அடுத்த முதல்வர் யார் என போட்டி காங்கிரஸ் கட்சியில் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications