சத்தீஸ்கர் காங். ஆட்சிக்கு நெருக்கடி - ஏக்நாத் ஷிண்டேவாக உருவெடுக்கிறாரா அமைச்சர் சிங் தியோ?
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் பஞ்சாப் பாணியில் முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லுக்கட்டுகின்றனர். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு எதிரான மூத்த காங்கிரஸ் தலைவரும் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தவருமான சிங் தியோ டெல்லிக்கு விரைந்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக பூபேஷ் பாகல் பதவியில் இருந்து வருகிறார். ஆனால் பூபேஷ் பாகலுக்கு இரண்டரை ஆண்டுகள்தான் முதல்வர் பதவி வழங்குவது என கட்சி மேலிடம் முடிவு செய்தது; எஞ்சிய இரண்டரை ஆண்டுகள் எனக்குதான் முதல்வர் பதவி தர வேண்டும் என்பது மற்றொரு மூத்த தலைவர் சிங் தியோவின் கலகக் குரல்.

திடீர் ராஜினாமா
கடந்த பல மாதங்களாக தொடரும் இந்த உட்கட்சி மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கலகக் குரல் எழுப்பி வரும் சிங் தியோ, தமது வசம் இருந்த பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இலாகாவை ராஜினாமா செய்தார். ஆனால் சுகாதாரம் மற்றும் குடும்பநலம், மருத்துவக் கல்வி, 20 அம்ச திட்ட அமலாக்கம் மற்றும் வணிக வரித் துறை இலாகாவை ராஜினாமா செய்யவில்லை.

சரமாரி குற்றச்சாட்டு
அத்துடன் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு சிங் தியோ கடிதம் ஒன்றையும் எழுதினார். அதில், தேர்தலின்போது வீடு இல்லாத 8 லட்சம் ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் நாம் குறிப்பிட்டிருந்தோம். இதனை நிறைவேற்றுவதற்காக, பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்குமாறு தொடர்ந்து உங்களிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் நிதி ஒதுக்காததால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. ஒருவருக்குக் கூட வீடு கட்டித்தரப்படவில்லை என விமர்சித்திருந்தார். இதனால் சத்தீஸ்கர் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

சத்தீஸ்கர் ஷிண்டே?
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை சிதைக்க ஏக்நாத் ஷிண்டே களமிறக்கப்பட்டதைப் போல, சத்தீஸ்கரில் சிங் தியோவை பாஜக களமிறக்கியிருக்கிறதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு ஆட்டம் காணும் நிலை உருவாகி இருக்கிறது. இந்நிலையில் சிங் தியோ டெல்லி செல்ல உள்ளதாகவும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் சத்தீஸ்கர் நிலவரம் குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் பாணியில் பரிதாபம்?
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதேபோல அதிகார மோதலில் சுவடே தெரியாமல் சிதைவுக்குள்ளானது. முதல்வராக இருந்த அமரீந்தர்சிங்குக்கு எதிராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த சித்து போர்க்கொடி தூக்கினார். இதனால் காங்கிரஸ் பிளவுபட்டது இல்லாமல், பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியையே பறிகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications