“FIRல் ஏன் ஒரேவா நிறுவனத்தின் பெயர் இல்லை?”.. மோர்பி பால விபத்து குறித்து ப.சிதம்பரம் நறுக் கேள்வி
காந்திநகர்: குஜராத்தின் மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 140க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விபத்து கடந்த 30ம் தேதி நிகழ்ந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவ.01) காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்த வழக்குப்பதிவில் பாலத்தை புனரமைத்த நிறுவனத்தின் பெயர், நகராட்சி நிர்வாகிகளின் பெயர் ஏன் இடம்பெறவில்லை? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

விபத்து
குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் மீது ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான் இந்த கேபிள் பாலம். அப்போது மரத்தை கொண்டு கட்டப்பட்டிருந்தாலும் சுதந்திரத்திற்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பாலம் புனரமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 7 மாதத்திற்கு முன்னர் பாலம் புனரமைப்புக்காக மூடப்பட்டது. ரூ.2 கோடி செலவில் புனரமைப்பு பணிகளை 'ஒரேவா' எனும் தனியார் நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இதனையடுத்து தீபாவளியையொட்டி மக்கள் பயன்பாட்டுக்காக பாலம் திறக்கப்பட்டது.

உயிரிழப்பு
பாலம் திறக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆன நிலையில் கடந்த 30ம் தேதி மக்கள் அதிக அளவில் பாலத்தை காண வந்திருந்தனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இயல்பாகவே அதிக கூட்டம் காணப்பட்டது. இவ்வாறு இருக்கையில் மாலையில் திடீரென பாலம் அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சுமார் 500 பேர் இருந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீட்பு படையினர் வருவதற்குள் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டன. மீட்பு பணியில் வீரர்கள் இறங்கியபோது அவர்கள் 94 பேரை உயிரற்ற சடலமாக மீட்டனர். பின்னர் இந்த உயிரிழப்பு 141ஆக அதிகரித்தது. 100 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

வழக்குப்பதிவு
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாலத்தை புனரமைத்த நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நிறுவனத்தின் மேலாளர் இருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தை அறிவித்தார். மேலும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து குறித்தும் பிரதமரின் நடவடிக்கை குறித்தும் எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

கேள்வி
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், "மோர்பி பாலத்தை புனரமைத்த 'ஒரேவா' நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் பெயர் ஏன் FIRல் பதிவு செய்யப்படவில்லை? அதேபோல முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்கள் ஏன் பதவி விலகவில்லை? விபத்து குறித்து கேள்வியெழுப்பினால் அது சோகத்தை அதிகரிப்பதாக அர்த்தமா? ஏன் பதில் தர மறுக்கிறீர்கள்? விபத்து நடந்து 48 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகியும் இந்த கேள்விகளுக்கு பாஜகவும், குஜராத் மாநில அரசும் இன்னும் ஏன் பதிலளிக்கவில்லை?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications