வரிசையில் நிற்காமல் வாக்களிக்க முயற்சி-சிரஞ்சீவியை தடுத்து தட்டிக்கேட்ட இளைஞர்!
ஹைதராபாத்: லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவின் போது மத்திய அமைச்சர் சிரஞ்சீவி வரிசையில் நிற்காமல் வாக்களிக்க முயன்றபோது பொதுமக்களே அவரை தடுத்து நிறுத்தி வரிசையில் நிற்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் 7வது கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இன்று தேர்தல் நடைபெறும் 9 மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று.
ஹைதராபாத்தில் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி இன்று காலை வாக்களிக்கப்பதற்காக வாக்குச் சாவடிக்கு சென்றார். அங்கு நீண்டவரிசை காத்திருந்தது. ஆனால் வரிசையில் நிற்காமல் விறுவிறுவென வாக்குச் சாவடிக்குள் அவர் செல்ல முயன்றார்.

அப்போது வரிசையில் நின்றிருந்த கார்த்திக் என்ற வாக்காளர் சிரஞ்சீவையை தடுத்து நிறுத்தினார். அத்துடன், உங்களுக்கு மட்டும் என்ன சிறப்பு சலுகை? நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போங்கள்.. நாங்கள் எல்லாம் வரிசையில் நிற்கவில்லையா? நீங்களும் போய் வரிசையில் நின்று வாக்களியுங்கள் என்று தடுத்து நிறுத்தினார்.
இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் சிரஞ்சிவீக்கு எதிராக வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களும் கூச்சலிட வேறுவழியே இல்லாமல் கியூவுக்குப் போய் நின்றுவிட்டார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவியை துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய வாக்காளர் கார்த்திக்கு கை கொடுத்தும் கைதட்டியும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தியது ஏன்?
மத்திய அமைச்சர் சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தியது கருத்து தெரிவித்த வாக்காளர் கார்த்திக், சிரஞ்சீவி மீது மரியாதை இருக்கிறது. ஆனால் அவர் வரிசையில் நின்றிருக்க வேண்டும். அவர் ஒன்றும் 65 வயதுக்கும் மேலான முதியவரோ அல்லது மாற்றுத்திறனாளியோ அல்ல. அதனால்தான் அவரை வரிசையில் நிற்க சொன்னேன் என்றார்.

சிரஞ்சீவி விளக்கம்
ஆனால் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, வாக்குச்சாவடியில் எந்த ஒரு விதிமுறைகளையும் நான் மீறவில்லை. வாக்காளர் பட்டியலில் என் பெயரை சரிபார்க்கத்தான் சென்றேன். ஆனால் ஊடகங்கள்தான் பரபரப்புக்காக மிகைப்படுத்தி செய்திகள் வெளியிடுகின்றன என்று கூறினார்.












Click it and Unblock the Notifications