காமன்வெல்த் போட்டிகள்: இதற்கு முன் அதிக பதக்கங்களை இந்தியா பெறவில்லையா? பா.ஜ.க. சொல்வது உண்மையா?
சமீபத்தில் பிர்மிங்கம்மில் நடந்து முடிந்த 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. பதக்கப் பட்டியலில் இறுதி இடங்களில் இருந்த இந்தியா, நான்காவது இடம்வரை வந்ததற்கு மோதி தலைமையிலான பா.ஜ.க. அரசே காரணம் என்கிறது தமிழக பா.ஜ.க. இது உண்மையா?
இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் 22வது காமன்வெல்த் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கின்றன. ஜூலை 28ஆம் தேதி துவங்கிய போட்டிகள் ஆகஸ்ட் எட்டாம் தேதி நிறைவடைந்தன.
இந்தப் போட்டிகளில் இந்தியா 22 தங்கப் பதக்கங்களையும் 16 வெள்ளிப் பதக்கங்களையும் 23 வெண்கலப் பதக்கங்களையும் வென்று, மொத்தம் 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது. பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு மேலே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருந்தன.
இந்திய வீரர்கள் பெற்ற வெற்றி குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசு நிர்வாகத்தில் இருப்பவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நிலையில், பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "இந்த போட்டிகளில் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெறுவது கனவாக இருந்தது. அப்படியும் ஓரிரு பதக்கங்கள் பெற்று இருந்தாலும் இந்தியா பதக்கப் பட்டியலில் இறுதியில் காணப்படும் நிலை இருந்தது ஆனால் இன்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
- செஸ் ஒலிம்பியாட்: கோலாகலமாக நடந்த நிறைவு விழா - எந்த இடத்தில் இந்திய அணி?
- செஸ் ஒலிம்பியாட்: ஹாங்காங்குக்காக விளையாடிய மதுரையின் சிகப்பி கண்ணப்பன்
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சீரிய முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக நாட்டின் விளையாட்டு துறை சீரமைக்கப்பட்டது.
அரசியல் விளையாட்டுகளால், தலைகுனிவை தந்த, இதற்கு முன் இந்தியாவில் இடம்பெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் போல இல்லாமல், இம்முறை அரசியல் விளையாட்டும் இல்லை விளையாட்டில் அரசியலும் இல்லை.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் நடைபெறும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மாண்புமிகு பாரதப்பிரதமர் நேர்மையாக முறையாக தகுதி அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம் 16 வெள்ளி 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் 4வது இடத்தை பதிவு செய்திருக்கிறது. இந்தச் சாதனை இதற்கு முன்பு நிகழ்த்தப்பட்டது இல்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
காமன்வெல்த் போட்டிகளில் முந்தைய நிலை என்ன?
காமன்வெல்த் போட்டிகள் 1930ஆம் ஆண்டில் துவங்கிய நிலையில், அந்தப் போட்டியில் இந்தியா பங்கேற்கவில்லை. ஆனால், 1934ஆம் ஆண்டு நடந்த போட்டியில் பிரிட்டிஷ் இந்தியாவாகப் பங்கேற்று ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது. 1938, 1950, 1954 ஆகிய ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் எந்தப் பதக்கத்தையும் வெல்லவில்லை. 1958ல் நடந்த போட்டியில் 3 பதக்கங்களையும் 1966ல் பத்து பதக்கங்களையும் 1970ல் 12 பதக்கங்களையும் 1974, 1978ல் நடந்த போட்டிகளில் தலா 15 பதக்கங்களையும் 1982ல் 16 பதக்கங்களையும் வென்றது. 1986ல் நடந்த போட்டிகளை இந்தியா புறக்கணித்தது.
இதற்குப் பிறகு 1990ல் நடந்த போட்டியில் 32 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. 1994ல் நடந்த போட்டியில் 24 பதக்கங்களையும் 1998ல் 25 பதக்கங்களையும் வென்றது. 2002ல் நடந்த போட்டியில் 69 பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது. இப்போது நடந்திருப்பதைப் போலவே அப்போதும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு மேலே இருந்தது.
2006ல் நடந்த போட்டியிலும் 49 பதக்கங்களை வென்று நான்காவது இடத்தைப் பிடித்தது. அப்போது 22 தங்கப் பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைத்தன. 2010ல் இந்தப் போட்டிகளை இந்தியாவே நடத்தியது. தலைநகர் தில்லியில் நடந்த போட்டியில் இந்தியா 101 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அந்த முறை 39 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது. காமன்வெல்த் ஆட்டங்களில் இந்தியாவின் உட்சபட்ச சாதனை அந்த ஆண்டில்தான் நிகழ்த்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது.
இதற்குப் பிறகு, 2014ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த க்ளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியா வெறும் 64 பதக்கங்களை மட்டுமே வென்று ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. 2018ல் 66 பதக்கங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இப்போது நடந்து முடிந்திருக்கும் போட்டியில், 61 பதக்கங்களைப் பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
அதேபோல தில்லியில் நடந்த காமன்வெல்த் ஆட்டத்தில்தான் இந்தியாவின் சார்பில் உச்சகட்டமாக அதிக விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். மொத்தமாக 49 வீரர்கள் பங்கேற்றனர். இந்த முறை 215 வீரர்களே இந்தப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றனர்.
ஆகவே, இதற்கு முன்பாக காமன்வெல்த் ஆட்டங்களில் இந்தியா இறுதி சில இடங்களிலேயே இருந்தது என்ற கூற்று சரியானதல்ல. 1958ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆட்டங்களில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வந்திருக்கிறது. 1994, 2006 ஆகிய ஆண்டுகளில் மட்டும் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட குறைந்தது. 2010ல் இரண்டாம் இடத்தைப் பிடித்து புதிய உச்சத்தைத் தொட்ட இந்தியா, 2014ல் இருந்து 5வது, மூன்றாவது, 4வது இடங்களையே பிடித்து வருகிறது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பிரிட்டனின் முன்னாள் குடியேற்ற நாடுகளுக்கு இடையில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளாகும். 1930ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் போட்டிகள் நடந்து வருகின்றன. 1942, 1948 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் உலகப் போரின் காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை. இதுவரை 22 போட்டிகள் நடைபெற்றுள்ளன. 1950வரை பிரிட்டிஷ் எம்பயர் கேம்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்தப் போட்டிகள், பிறகு பிரிட்டிஷ் எம்பயர் அண்ட் காமன்வெல்த் கேம்ஸ் என்று அழைக்கப்பட்டன. 1970, 74ல் பிரிட்டிஷ் காமன்வெல்த் கேம்ஸ் என்று அழைக்கப்பட்டன. 1978ல் இருந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என அழைக்கப்படுகின்றன.
https://www.youtube.com/watch?v=JEtNcHS5GQY
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














Click it and Unblock the Notifications