பாஜகவுடன் கைகோர்த்த மிசோரம் காங்கிரஸ்.. தேர்தல் ஆணையம் மீது சரமாரி விமர்சனம்.. காரணம் இதுதான்!
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் பதிவாகியுள்ள வாக்குகள் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் தேதியை மாற்றியமைக்க கோரிக்கைகள் எழுந்த நிலையில், தேர்தல் ஆணையம் செவி சாய்க்கவில்லை. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு கடந்த 7ஆம் தேதியன்று நடைபெற்றது. இம்மாநிலத்தில் பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. எனவே பாஜகவும் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது.

அதேபோல கடந்த 1987ஆம் ஆண்டு மிசோரம் யூனியன் பிரதேசத்திலிருந்து, மாநிலமாக பரிணமித்ததிலிருந்து அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியிலிருக்கிறது.
ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளன. இது தவிர 27 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். மிசோ தேசிய முன்னணி தலைவரும் முதலமைச்சருமான ஜோரம்தங்கா, ஐஸ்வால் கிழக்கில் போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில் பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு அம்மாநில அரசியல் கட்சிகள் சில ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றன. ஏனெனில் இந்த மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இவர்கள் 85 சதவிகிதமாக இருக்கின்றனர்.
எனவே வாக்கு எண்ணிக்கை தேதி ஞாயிற்றுக்கிழமையாக வருவதால் அதனை மாற்ற வேண்டும் என ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்), பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தேவாலயம், மாணவர் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்புக் குழுக்களும் கோரிக்கை வைத்திருந்தன. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதாவது, தேர்தல் ஆணையம் மிசோரம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஏற்கெனவே வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என மிசோரம் காங்கிரஸ் தலைவர் லால்சவ்தா தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு முறை கடிதம் எழுதியிருக்கிறார். ஆனாலும் தேர்தல் ஆணையம் கோரிக்கைக்கு செவி சாய்க்காத நிலையில், "ஆணையம் வேண்டும் என்றே மிசோரம் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக" காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தை எதிர்க்கும் விஷயத்தில் மிசோரமில் காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications