கண்ணிவெடி தாக்குதல்: 2 மணி நேரம் சிகிச்சையின்றி தவித்த சி.ஆர்.பி.எப் வீரர்!
அவுரங்காபாத்: பீகார் மாநிலம், அவுரங்காபாத்தில் கண்ணிவெடி தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர், இரண்டு மணி நேரம் சிகிச்சையின்றி தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், அவுரங்காபாத்தில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் அதிகாரி உள்பட 3 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர் திலீப் குமார் என்பவர் படுகாயம் அடைந்தார்.
தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு மணி நேரமாகியும் அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்ல மற்ற யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. உதவிகேட்டு அபயக் குரல் எழுப்பிய அவர், அதனை தனது செல்போனில் பதிவு செய்தார்.

டிவியில் ஒளிபரப்பு
திலீப் குமாருக்கு நேர்ந்த கொடுமை பற்றிய செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. அதில், "2 மணி நேரமாகியும் என்னை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் கூட வரவில்லை. தாக்குதல் சம்பவத்தை எங்க அதிகாரிகளிடம் சொல்லவில்லை என்றால் நான் இறந்துவிடுவேன். என் உடலில் இருந்து நிறைய ரத்தம் வெளியேறுகிறது.
என்னை காப்பாற்றுங்கள்
இன்னும் 5 முதல் 10 நிமிடங்களில் உயிரிழந்து விடுவேன். என்னுடைய டிஜிபிக்கு தகவல் தெரிவியுங்கள். பிரதமர், குடியரசுத் தலைவர்கிட்ட கெஞ்சி கேட்டுக்கிறேன். தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நான் கதறிக்கிட்டு இருக்கேன். 2 மணி நேரம் ஆகியும் கூட ஒரு மருத்துவர் கூட பக்கத்தில் இல்லை" என்று கூறியுள்ளார்.
மீட்கப்பட்ட வீரர்
இந்த செய்தி வெளியானதையடுத்து, சி.ஆர்.பி.எப் வீரர் திலீப் குமார், உடனடியாக மீட்கப்பட்டு ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பாஜக கண்டனம்
இதனிடையே, இந்த சம்பவத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், "இது மிகவும் துயரமான சம்பவம். இது மிகவும் கண்டித்தக்கது. சி.ஆர்.பி.எப் வீரர், டி.எஸ்.பி கொல்லப்பட்டிருப்பது தேசத்திற்கே மிகப் பெரிய அவமானம். இதுபோன்ற பாதகச் செயல்களில் ஈடுபடும் நக்சலைட்டுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications