குஜராத்தில் இன்று இரவே டவ்-தே புயல் கரையை கடக்க வாய்ப்பு- வானிலை மையம்
போர்பந்தர்: அரபிக் கடலில் உருவாகி உள்ள அதிதீவிர டவ்-தே புயல் இன்று இரவே குஜராத்தின் போர்பந்தர்- மஹூவா இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
லட்சத்தீவு அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டவ்-தே புயலாக வலுவடைந்தது. இந்த புயல் தற்போது அதிதீவிர புயலாகி உள்ளது.

கேரளாவில் பாதிப்பு
டவ்-தே புயல் காரணமாக கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கேரளாவில் 2 மீனவர்களும் கர்நாடகாவில் 4 பேரும் டவ்-தே புயலின் சீற்றத்துக்கு பலியாகி உள்ளனர். கேரளாவின் பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

73 கிராமங்களில் பாதிப்பு
கர்நாடகாவின் 73 கடலோர கிராமங்கள் டவ்-தே புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த டவ்-தே புயல் தற்போது குஜராத் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது இன்று இரவே குஜராத்தின் போர்பந்தர்- மஹூவா இடையே கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

உஷார் நிலையில் குஜராத்
இதனால் குஜராத் மாநிலத்தில் பல பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே குஜராத்தில் 25,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று மாலைக்குள் மேலும் 1.50 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர்.

1998-க்குப் பின் தாக்கு அதிதீவிர புயல்
குஜராத்தில் புயல் மீட்பு, நிவாரண பணிகளுக்காக ஏற்கனவே 44 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் முகாமிட்டுள்ளன. 1998-ம் ஆண்டு குஜராத்தின் கட்ச் பகுதியை அதிதீவிர புயல் தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் குஜராத்தை தாக்கும் அதிதீவிர புயல் டவ்-தே.


Click it and Unblock the Notifications
