பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தப்பு செய்து விட்டார் மோடி... ஆர்.எஸ்.எஸ். திடீர் பாய்ச்சல்!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக தலைவர்களை சற்றே பீதியடைய வைத்துள்ளது. இந்த நேரத்தில் முதல்வர் வேட்பாளராக கிரண்பேடியை அறிவித்தது பிரதமர் மோடியும், தலைவர் அமித்ஷாவும் செய்த தவறு என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு சனிக்கிழமையன்று தேர்தல் நடைபெற்றது. பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவினாலும் பாஜக - ஆம் ஆத்மி இடையேதான் பலத்த போட்டி நிலவியது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவிற்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே சரியான அளவில் இடங்கள் கிடைக்கும் என்று கூறினாலும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சிக்கே அமோக வெற்றி என்று தெரிவித்துள்ளன.
அதெல்லாம் நம்பாதீங்க என்று பாஜக தலைவர்கள் சொன்னாலும் சற்றே உதறலுடன் கூடி கூடி விவாதித்து வருகின்றனர் பாஜகவினர்.

ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு
இந்த பரபரப்புக்கு மத்தியில் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி என்ற அறிவிப்பால் தான் பா.ஜ.கவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ்., வட்டாரம் தெரிவித்துள்ளது. மோடியும், அமித்ஷாவும் இந்த விசயத்தில் தவறு செய்துவிட்டதாகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஒத்துழைப்பு இல்லை
டெல்லியில் பா.ஜ.க தொண்டர்கள், தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லை. மேலும் முதல்வர் வேட்பாளராக கிரண்பேடியை தேர்வு செய்தது பாஜக தலைமை செய்த தவறு என்றும், கெஜ்ரிவாலுக்கு எதிரான பிரசாரம் பின்னடைவை தந்துள்ளது என்றும் கூறியுள்ளது.

முழுப்பொறுப்பு
அதேசமயம் தேர்தலில் தோல்வி என்றால் அதற்கான முழு பொறுப்பையும் நானே ஏற்று கொள்கிறேன் என கிரண்பேடி கூறியுள்ளார்.

நிர்மலா சந்திப்பு
இந்நிலையில் கிரண்பேடியை அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்தித்து பேசினார். வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் முடிவுக்காக நாங்கள் காத்திருக்கறோம். பா.ஜ.க வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துக்கணிப்புகள் தங்களுக்கு சாதகமாக இருந்தாலும் முடிவு வரும் வரை காத்திருப்போம் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். தேர்தலுக்கு கடுமையாக உழைத்து விட்டீர்கள் 2 நாள் ஓய்வு எடுங்கள் என கூறி தொண்டர்களை ரிலாக்ஸ் செய்ய கூறியுள்ளார்.

வெற்றி எங்களுக்கே
கருத்துக்கணிப்புகளைப் பற்றி கவலையில்லை வெற்றி எங்களுக்கே என பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நரசிம்ராவ் கூறியுள்ளார். ஆம் ஆத்மியை பொறுத்தமட்டில் எங்களுக்கு கடும் போட்டியாளராக இருந்தனர் என்பது தான் உண்மை. ஆனால் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த கட்சிக்கு ஆதரவு கொடுப்பவர்கள் கூச்சல், கூப்பாடு போட்டபடி உள்ளனர். ஆனால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

ரகசிய கூட்டம்
நாளை தேர்தல் ஓட்டுக்கள் எண்ணும் பணி நடக்கிறது. மதியத்திற்குள் ஆட்சி அமைக்கப்போவது யார் என தெரிந்து விடும். இதற்கிடையில் வெற்றி , தோல்வி குறித்து அனைத்து கட்சிகளும் அலசி ஆராய துவங்கியுள்ளது. பா.ஜ.க உயர் மட்ட தலைவர்கள் டெல்லியில் ரகசிய ஆலோசனை நடத்தினர். தேர்தல் முடிவை அடுத்து நாம் எடுக்க வேண்டிய நிலைகள் குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications