தேர்தலில் காங்.,பா.ஜ.க. மெஜாரிட்டியில் வென்றால் அரசியலை விட்டு விலகுகிறேன்: தேவேகவுடா சவால்

முன்னாள் அமைச்சரான சிவானந்த நாயக், பாரதீய ஜனதாவில் இருந்து விலகி எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தார். தற்போது அவர் கர்நாடக ஜனதா கட்சியில் இருந்து விலகி, ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைந்துள்ளார்.
நேற்று, பெங்களூர் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் குமாரசாமி ஆகியோர் சிவானந்த் நாயக்கிடம் கட்சிக்கொடியை கொடுத்து கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் தேவேகவுடா பேசியதாவது :-
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவது நிச்சயம். பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமது சொந்த பலத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறவில்லை. அவர் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் தான் கவனம் செலுத்துகிறார். வி.பி.சிங் ஆட்சி காலத்தில் தொடங்கிய கூட்டணி கலாசாரம் இந்த முறையும் தொடரும். இதில் சந்தேகம் அடைய தேவை இல்லை.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அரசின் நிர்வாக தோல்விகளை மக்கள் பார்த்து உள்ளனர். பா.ஜனதாவினரின் ‘மோடி மந்திர'த்தை மக்கள் நம்ப மாட்டார்கள். காங்கிரஸ் அல்லது பா.ஜனதா கட்சிகள் தங்களது சொந்த பலத்தில் வெற்றி பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தால் நான் அரசியலைவிட்டே விலகிவிடுகிறேன். விளம்பரத்துக்காக எந்தவொரு தனிநபரையும் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது.
சிலர் மோடிக்கு எதிராக அப்படி பேசுகிறார்கள். இது சரியானது அல்ல. அரசியல் ரீதியாக பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியிடம் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு மதிப்பு, மரியாதை உள்ளது. அவரை குறித்து யாராவது விமர்சித்தால் அதை கண்டிப்பேன்." என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் குமாரசாமி கூறியதாவது:-
"தற்போதைய காங்கிரஸ் ஆட்சியானாலும் சரி, கடந்த பா.ஜ.க அரசானாலும் சரி, இரண்டும் மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை. ஓட்டு வங்கிக்காக சில திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவிப்பை மட்டும் வெளியிடுகிறார்கள். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். காங்கிரஸ் அரசின் தோல்விகளை பார்த்து உள்ளனர். எனவே நாடாளுமன்ற தேர்தலில் எக்காரணம் கொண்டு தேசிய கட்சிகளை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சியை பலப்படுத்துவதற்காக மாநிலத்தின் சில பகுதிகளில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. புதன்கிழமை(நாளை) தும்கூரில் மகளிர் மாநாடும், அடுத்த மாதம் (பிப்ரவரி) 16-ந் தேதி கும்டாவில் மாநாடும் நடைபெற உள்ளது. அத்துடன் பெங்களூர் அரண்மனை மைதானத்தில் இளைஞர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது." என இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Click it and Unblock the Notifications
