சிங்கமும் நாயும் சண்டை போட்டுக் கொண்டால் யார் ஜெயிப்பார்கள்? குஜராத்தில் நடந்ததை பாருங்கள்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஊருக்குள் புகுந்த சிங்கங்கள் ஒரு வீட்டை குறி வைக்க அங்கிருந்த நாய் குரைத்தே இரு சிங்கங்களையும் புறமுதுகிட்டு ஓட வைத்திருக்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், காட்டுக்கே ராஜா ஆனாலும், இது எங்க ஏரியா உள்ள வராத! என நாய் விரட்டியதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட ஆசிய சிங்கங்கள் வளர்ந்து வருகிறது. 2020 கணக்கெடுப்பின்படி அங்கு சுமார் 674 சிங்கங்கள் வசிப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிர் தேசிய பூங்காவில் ஆசிய சிங்கங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. தற்போது அங்கு சிங்கங்களின் இனப்பெருக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் சில நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சிங்கங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருவது வழக்கம்.
இதனால் சில நேரங்களில் மனித - சிங்க தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அப்படி தோர்டி கிராமத்திற்குள் புகுந்த இரு சிங்கங்கள் அந்த வீட்டு நாய்களால் துரத்தப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. உலக அளவில் ஆசிய சிங்கங்கள் அழிவின் விளிம்பில் இருக்கும் நிலையில் குஜராத்தின் கிர் தேசிய பூங்காவில் மட்டுமே அவைகள் வாழும் ஒரே வசிப்பிடமாக இருக்கின.

தற்போது அந்த பூங்காவில் கடும் வறட்சி நிலையில் அங்கிருந்து வெளியேறிய இரு சிங்கங்கள், அந்த பூங்காவிலிருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோர்பி கிராமத்தில் தஞ்சம் புகுந்திருக்கின்றன. மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் இரு சிங்கங்கள் சாலையில் உலா வந்து ஒரு வீட்டின் கேட் அருகே நிற்கின்றன. அப்போது வீட்டில் வளர்க்கப்பட்டிருந்த நாய் பயப்படாமல் சொல்லப்போனால் மிகவும் ஆக்ரோஷமாக சிங்கத்தை மிகவும் கோபத்தோடு எதிர்கொண்டது.
இரு சிங்கங்களும் அங்கும் இங்கும் நடக்க மற்றொரு நாயும் அங்கு வந்து சிங்கங்களை பார்த்து பயங்கர சத்தத்துடன் குரைத்தது. அப்போது அங்கு வந்த மற்றொரு சிங்கம் கேட்டில் ஓங்கி அறைந்து நாய்களை தாக்க முயன்றது. தொடர்ந்து இரு சிங்கங்களும் கேட்டை பயங்கரமாக தாக்கிக் கொண்டிருந்த நிலையில் நாய்களும் சளைக்காமல் ஈடு கொடுத்து குரைத்துக் கொண்டே இருந்தன.

ஒரு கட்டத்தில் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என நினைத்ததோ என்னவோ இரு சிங்கங்களும் அருகில் இருந்த புதருக்குள் ஓடி மறைந்து விட்டன. இருந்தாலும் அவை வருவதற்கு வாய்ப்பு இருந்த போதும் பயப்படாத நாய் ஒன்று வெளியில் வந்து குரைத்து சிங்கங்களை துரத்தி அடித்தது. காலையில் கேட் தாக்கப்பட்டு இருப்பதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் அதன் பிறகு சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்த்து தங்கள் வீட்டுக்கு சிங்கங்கள் வந்ததை உணர்ந்திருக்கிறார்.
இதனையடுத்தே அவர் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட, எங்க ஏரியா உள்ள வராதே என நாய்களின் புகழ் இணைய தளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications