நீட்டில் 99% மார்க்.. சந்தோஷத்தில் மிதந்த குடும்பம்.. ஆனால் கல்லூரியில் சேரும் நாளில் இளைஞர் தற்கொலை
லக்னோ: நீட் தேர்வில் 99% மார்க் வாங்கிய இளைஞர் ஒருவர் மருத்துவப் படிப்பில் சேரவிருந்தார். இருப்பினும், தான் மருத்துவராக விருப்பமில்லை எனச் சொல்லி கல்லூரியில் சேரும் நாளில் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
நமது நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு முதலே நீட் தேர்வு மூலம் தான் மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. நீட் என்பது தேசியளவில் நடத்தப்படும் ஒரு நுழைவுத் தேர்வாகும். சில நேரங்களில் நீட் அழுத்தம் தாங்க முடியாமல் சில மாணவர்கள் மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

99% மார்க் வாங்கியும் தற்கொலை
ஆனால், இந்த முறை நீட்டில் 99 மார்க் வாங்கிய மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட்டில் இத்தனை மார்க் வாங்கிய போதிலும், அவருக்கு மருத்துவம் படிப்பதில் ஆர்வம் இல்லையாம். இதனால் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவர் இன்று மருத்துவக் கல்லூரியில் சேரவிருந்தார். இருப்பினும், தனக்கு மருத்துவம் படிக்க விருப்பமில்லை என கடிதம் எழுதிவிட்டு, அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக் கடிதத்தைக் கைப்பற்றிய போலீசார் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
மகாராஷ்டிர இளைஞர்
முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட அந்த இளைஞர் அனுராக் அனில் போர்க்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 19 வயதான அந்த மாணவர், சிண்டேவாஹி அடுத்துள்ள நவர்கான் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் 99 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார், இவர் ஓபிசி பிரிவில் அகில இந்திய அளவில் 1475வது இடத்தைப் பிடித்து அசத்தியிருந்தார்.
நீட்டில் இந்தளவுக்கு மார்க் வாங்கியதால் இவருக்கு உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க சீட் கிடைத்துள்ளது. இவர் மருத்துவராகிவிடுவார் என வீட்டிலும் அனைவரும் சந்தோஷத்தில் இருந்துள்ளனர். அப்போது தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தற்கொலை
கல்லூரியில் சேர அனுராக் கோரக்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பே தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். வீட்டிலேயே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தற்கொலை குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அனுராக் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது அறையில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு ஒரு தற்கொலைக் கடிதத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர். அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது என்பதை அதிகாரிகள் முழுமையாகச் சொல்லவில்லை. இருப்பினும் தான் மருத்துவராக விரும்பவில்லை என்று அனுராக் அதில் எழுதியிருந்ததாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சம்பவம் குறித்து இப்போது நவர்கான் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
அதிகரிக்கும் மன அழுத்தம்
இந்தக் காலத்தில் பல மாணவர்கள் தங்கள் படிப்பில் பெரும் அழுத்தத்தை உணர்கிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு பகுதி தானே தவிர அது மட்டும் முழு வாழ்க்கை இல்லை. மன அழுத்தம் ஏற்படும்போது அதைச் சமாளிக்கக் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் வெளிப்படையாகப் பேசுங்கள். நிச்சயம் அவர்கள் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்வார்கள்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications