கர்ப்பத்தில் முடிந்த பேஸ்புக் காதல்.. டச்சு நாட்டுக்காரர் மீது ஹரியானா பெண் பலாத்கார புகார்!
பெங்களூர்: பேஸ்புக் மூலம் பழக்கமான டச்சுக்காரரிடம் கற்பை பறிகொடுத்து கர்ப்பமானதாகவும், தற்போது திருமணம் செய்ய அந்த நபர் மறுப்பதாகவும் பெங்களூர் போலீசில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார்.
பெங்களூர் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள தேவனஹள்ளி அடுத்த சதாஹள்ளி பகுதியில் வசிப்பவர் பீட்டர் டி டுருஜின் (43). டச்சு நாட்டவரான இவர் அந்த நாட்டு அரசு உதவியுடன் செயல்படும் ஒரு என்.ஜி.ஓ அமைப்பின் இயக்குநர் பதவியில் உள்ளார்.

பேஸ்புக் நட்பு
டேட்டிங் வெப்சைட் ஒன்றின் மூலமாக ஹரியானாவை சேர்ந்த 33 வயது பெண் பழக்கமாகியுள்ளார். இதன்பிறகு பேஸ்புக் மூலம், அவர்கள் நட்பு விரிவடைந்தது. இந்நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பீட்டர் டி டுருஜின் தெரிவித்துள்ளார். இதற்கு அப்பெண்ணும் சம்மதித்துள்ளார்.

கர்ப்பம்
இதையடுத்து 15 நாள் விடுமுறையில் ஹரியானாவில் இருந்து பெங்களூர்வந்த அந்த பெண், பீட்டர் வீட்டிலேயே தங்கியுள்ளார். அப்போது இருவரும் உடல்ரீதியாக உறவு வைத்துள்ளனர். ஹரியானாவுக்கு திரும்பியதும் அந்த பெண் கர்ப்பமானார். இதுகுறித்து பீட்டரிடம் கூறி திருமணம் செய்யுமாறு அப்பெண் கேட்டதற்கு, கருவை கலைக்குமாறு பீட்டர் கூறியுள்ளார்.

போலீசில் புகார்
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் தனது கர்ப்பத்தை அப்பெண் கலைத்துள்ளார். இதன்பிறகு அவருடனான தொடர்பை பீட்டர் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரியானா பெண், பெங்களூர் வந்து தேவனஹள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், திருமணம் செய்வதாக ஏமாற்றி தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக பீட்டர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

பலாத்கார வழக்கு
இதையடுத்து போலீசார் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376, 420, 506 ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 376வது பிரிவு பலாத்காரத்துக்கானதாகும். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையின்போது பீட்டர் தன்மீதான பலாத்கார புகாரை மறுத்துள்ளார். இருவரும் சம்மதித்து உறவு வைத்துக் கொண்டதாகவும், திருமணம் செய்வதாக தான் வாக்கு அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் பீட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
