மகளைக் கொன்ற வழக்கில் ஸ்டார் டிவி இந்தியா சி.இ.ஒ. மனைவி கைது
மும்பை: மகளை கொலை செய்து உடலை வீசிய வழக்கில் ஸ்டார் இந்தியா டிவி நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை ஆகஸ்ட்31ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷீனா போரா என்பதாகும். இவர் மும்பையில் வோர்லி பகுதியில் வசித்து வந்தார். இவர் இந்திராணி முகர்ஜியின் மகள் ஆவார்.

மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த ஷீனா போரா, ரிலையன்ஸ் நிறுவனத்தில் கடந்த 2012ம் ஆண்டு பணிபுரிந்தார். அப்போது அவருக்கு வயது 24. இந்த நிலையில்தான் திடீரென அவர் மாயமானார். போலீசார் நடத்திய விசாரணையில், ஷீனா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் 43 வயதான இந்திராணி முகர்ஜியை போலீசார் நேற்று கைது செய்தனர். பந்த்ரா மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இந்திராணியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை வைத்ததால் ஆகஸ்ட் 31வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக பீட்டர் முகர்ஜி இருந்த போதுதான் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆனது. பீட்டர் - இந்திராணியின் திருமணம் 2002ம் ஆண்டு நடைபெற்றது. மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்த இந்திராணி பீட்டரின் இரண்டாவது மனைவியாவார். இவர் ஐ.என்.எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருக்கிறார்.
இந்திராணிக்கு ஷீனா போரா என்ற மகளும், மைக்கேல் போரா என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் கவுகாத்தியில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தனர். மும்பையில் படிப்பை முடித்து விட்டு அங்கேயே வேலை கிடைக்கவே மும்பையில் தங்கிவிட்டார் ஷீனா போரா. 2012ம் ஆண்டில் இருந்து தனது சகோதரியை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்று கூறியுள்ளார். மைக்கேல் போரா.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது தாயார் தன்னைக் காண வந்த போது ஷீனா பற்றி கேட்டதாகவும், அதற்கு அவர் வெளிநாட்டிற்கு ஷீனா போய்விட்டதாகவும் கூறினார்.
கடந்த 2012ம் ஆண்டு தனது மகள் ஷீனாவை கொலை செய்து அவரது கார் டிரைவர் மூலம் உடலை யாருக்கும் தெரியாமல் வீசிவிட்டார். முன்றாண்டுகளுக்குப் பின்னர் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக்கொலைக்காண காரணம் பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஷீனாவின் ஃபேஸ்புக் கணக்கு கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஷீனாவின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்றும் மைக்கேல் போரா கூறியுள்ளார். என் அம்மாவைவிட என்னிடம் அதிகம் பாசம் காட்டியது என் சகோதரிதான். அவள் அப்பாவி, அவளது மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் மைக்கேல் கூறியுள்ளார்.
இதனிடையே கொலைக்குக் காரணம் என்ன என்பது பற்றி பலவித கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீட்டர் முகர்ஜியின் மகனை ஷீனா போரா காதலித்ததாகவும் அதனை ஒத்துக்கொள்ளாத இந்திராணி, தனது மகள் ஷீனாவை கொலை செய்து டிரைவர் மூலம் உடலை வீசி விட்டதாகவும் டெலிகிராப் இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல கோடி ரூபாய் பண விவகாரத்தில் ஷீனா போரா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் 31வரை இந்திராணியை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர் அதில் கொலைக்கான காரணத்தை இந்திராணி தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications