ஆட்டோவில் தூங்கி 5 மணி நேரம் பெற்றோர், போலீசாரை பரிதவிக்க விட்ட சிறுவன்!
மும்பை: மும்பையில் ஆட்டோவில் தூங்கிய சிறுவனால் 5 மணி நேரம் அவரது பெற்றோர் பரிதவித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
மும்பை மரோல் போலீஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் உத்தம். இவர் மேக்வாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு கணேஷ், யாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் யாஷ் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி தூங்கி விட்டான். சிறிது நேரத்திற்கு பின் வந்த ஆட்டோ டிரைவர், சிறுவன் யாஷ் ஆட்டோவில் தூங்கி கொண்டிருப்பதை கவனிக்காமல் தகிசருக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் மகனை காணாமல் உத்தமின் குடும்பத்தினர் அங்கும், இங்குமாக தேடி அலைந்தனர். பின்னர் உத்தம் மேக்வாடி போலீஸ் நிலையம் சென்று மகன் காணாமல் போய் விட்டதாக புகார் கொடுத்தார். சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாம் என கருதிய போலீசார் அருகில் உள்ள அந்தேரி ஜோகேஸ்வரி, கோரேகாவ் போலீசாரை உஷார்படுத்தினார்கள்.
உடனே அந்தந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தகிசர் சென்ற பின்னர் தான் சிறுவன் யாஷ் தனது ஆட்டோவில் தூங்கி கொண்டிருப்பதை ஆட்டோ டிரைவர் கவனித்தார். இதை பார்த்து பதறி போன அவர் மீண்டும் அவனை அழைத்துக் கொண்டு நள்ளிரவில் மரோல் போலீஸ் காலனிக்கு வந்தார்.
அப்போது பரிதவிப்புடன் வெளியே உத்தம் குடும்பத்தினர் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் அவர்களிடம் சென்று, நடந்ததை கூறி சிறுவன் யாசை ஆட்டோ டிரைவர் ஒப்படைத்தார். மகன் மீண்டும் கிடைத்ததையடுத்து உத்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆட்டோ டிரைவரையும் பாராட்டினார்கள். இதையடுத்து அவர்களின் 5 மணி நேர பரிதவிப்பு முடிவுக்கு வந்தது.


Click it and Unblock the Notifications
