மோடியை விமர்சிப்பவர்களை பாகிஸ்தானுக்கு ஓடச் சொன்ன கிரிராஜ் மீது ஜார்க்கண்ட் போலீஸ் வழக்கு!
ராஞ்சி: மோடியை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப்போக வேண்டும் என்று பேசிய பாரதிய ஜனதாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கிரிராஜ் சிங் மீது ஜார்க்கண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பீகார் மாநில முன்னாள் அமைச்சரும், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவருமான கிரிராஜ்சிங், அம்மாநிலத்தில் உள்ள நவாடா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, 'நரேந்திர மோடியை பிரதமராக விடாமல் தடுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல தயராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் இடமில்லை. அவர்கள் வசிக்க பாகிஸ்தானில் இடம் கிடைக்கும் என்றார்.
கிரிராஜ் சிங் பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. மேலும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தது.
இதேபோல் பா.ஜ.க. மேலிடமும் சர்ச்சையை உருவாக்கும் வகையில் இதுபோல் எதையும் பேச வேண்டாம் என்று எச்சரித்தது. ஆனாலும் கிரிராஜ்சிங் விடுவதாக இல்லை. தாம் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என்றே திரும்ப திரும்ப கூறிவந்தார்.
இந்நிலையில் அவர் மீது ஜார்க்கண்ட் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications