லலித் மோடி விவகாரத்தில் சிக்கிய வசுந்தரா ராஜேவின் லண்டன் பயணம் திடீர் ரத்து!
டெல்லி: லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் சிக்கிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தனது லண்டன் பயணத்தை திடீரென ரத்து செய்து உள்ளார்.
நிதி முறைகேட்டில் தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி லண்டனில் தலைமறைவாக உள்ளார். அவரது மனைவியின் சிகிச்சைக்காக போர்ச்சுக்கல் செல்வதற்கு பயண ஆவணங்கள் கிடைக்க உதவியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேயும் உதவியதாக லலித் மோடியே கூறியிருந்தார். இதனை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் மத்திய அரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இருப்பினும் பாரதிய ஜனதா, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. இப்பிரச்சனை எழுந்ததில் இருந்து வசுந்தரா ராஜே, இதுதொடர்பாக எதுவும் பேசவில்லை.
அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில், பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியையும் அவர் புறக்கணித்தார்.
இந்நிலையில் வசுந்தரா ராஜே தனது லண்டன் பயணத்தை திடீரென ரத்துசெய்து உள்ளார். அவர் வரும் 27-ந் தேதி முதல் 1 வார காலம் லண்டன் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய தேடப்படும் குற்றவாளி லலித் மோடியும் தற்போது லண்டனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
