உயிர் காக்கும் மருந்துகளின் விலை இனி “கொட்டை எழுத்துகளில்” – மத்திய அரசு உத்தரவு
டெல்லி: இந்தியாவில் இனி உயிர் காக்கும் மருந்துகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை சிவப்பு நிற பட்டையில் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட உள்ளது.
மேலும், "விலை கட்டுப்பாட்டின் கீழ் இந்த மருந்து கொண்டுவரப்பட்டுள்ளது" என்ற வாசகமும் இடம்பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும் என்று கடந்த 2003 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், உயிர்காக்கும் மருந்துகளை பட்டியலிட்டு அவற்றுக்கு விலை கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும் என்று அறிவுறுத்தியது. இருப்பினும் இது செயல்வடிவம் பெறவில்லை. நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் விலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மருந்து பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதில் 348 மருந்துகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. எனவே, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புதிய மருந்துகள் பலவற்றை இந்த பட்டியலில் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய புதிய பட்டியலை தயாரித்து வருகிறது. ரத்தக்கொதிப்பு, வலி நிவாரணம், மன அழுத்தம், எச்ஐவி, நிமோனியாவுக்கான மருந்துகள் உட்பட 100க்கும் மேற்பட்ட மருந்து வகைகள் சேர்க்கப்பட உள்ளது.
எனவே, இவற்றின் விலை விரைவில் குறைய உள்ளது. இந்த விலை குறித்த தகவல் வரும் ஜனவரியில் அமலுக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications