அரசியல்ல இதெல்லாம்..! கடைசி வரிசையில் நின்ற பஜன்லால் அடுத்த சில நிமிடங்களில் அரியணை! மேலிட பிளானா?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதலமைச்சர் பதவிக்கு பாஜகவில் பல தலைவர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், முதல் முறை எம்.எல்.ஏவான பஜன்லால் சர்மா, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட குரூப் போட்டோவில் கட்டக் கடைசியாக நின்றவர், தற்போது ராஜஸ்தானின் முதல்வர் ஆகியுள்ளார். இதனை மேலிடம் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது. இதையடுத்து, முதல்வர் யார் என்ற கேள்வி கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, எம்.பி.யாக இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாபா பாலக்நாத், கிரோரி லால் மீனா, தியா குமாரி ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டன. கஜேந்திர சிங் ஷெகாவத், சிபி ஜோஷி, அர்ஜுன் மேக்வால், ராஜேந்திர சிங் ரத்தோர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன.

முதல்வர் ரேஸ்: இந்நிலையில், பாஜகவின் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மேலிடப் பார்வையாளர்களாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வினோத் தாவ்டே, சரோக் பாண்டே ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவை தலைவராக, அதாவது முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவதற்கு சற்று முன்பு, கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் இருக்கும் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. அதில் பஜன்லால் சர்மா கடைசி வரிசையில் நின்றிருந்தார். அடுத்த சில மணி நேரத்தில், அவர் மாநில அரசியலின் போக்கையை நிர்ணயிக்கும் இடத்திற்கு வந்தார். ராஜஸ்தானில் புதிய அரசாங்கத்தை வழிநடத்தும் பெரும் பொறுப்பை, கடைசி வரிசையில் நின்ற பஜன் லால் சர்மாவுக்கு வழங்கியுள்ளது பாஜக மேலிடம்.

கடைசி வரிசையில் நின்ற பஜன்லால் சர்மா: பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பஜன்லால் ஷர்மா, முதல் முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டிருப்பவர். ராஜஸ்தான் மாநில பாஜக பொதுச் செயலாளராக பணியாற்றியவர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியில் பணியாற்றியவர். நீண்டகாலமாக பாஜகவில் உள்ளார். பாஜகவின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் மாவட்ட தலைவராக இருந்துள்ளார். அந்த சமயத்தில் யுவ மோர்ச்சா தேசிய தலைவராக இருந்தவர் அமித்ஷா. அதன் மூலம் அமித்ஷாவுடன் நெருக்கம் கொண்டவர். ராஜஸ்தான் மாநில பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
பஜன் லால் சர்மாவின் சொந்த தொகுதியான பரத்பூர், பாஜகவுக்கு சாதகமான தொகுதி அல்ல. அங்கு, கடந்த இரண்டு தேர்தல்களிலும் ராஷ்டிரிய லோக்தளம் இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பாஜக ஆட்சியைப் பிடித்த போதும் பரத்பூர் பாஜகவின் கைவசம் இல்லை. இந்நிலையில் தான் பாஜகவின் கோட்டையான சங்கனெர் தொகுதியில் போட்டியிட வைக்கப்பட்டார் பஜன் லால் சர்மா.

எல்லாமே பாஜக மேலிட திட்டம்?: ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சங்கானெர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்த தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்த அசோக் லஹோட்டிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாமல், பஜன்லால் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அசோக் லஹோட்டி வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர். அவருக்கு சீட் மறுக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
பஜன் லால் சர்மா, தனது முதல் தேர்தலில் பாதுகாப்பான தொகுதியில் இருந்து களமிறக்கப்பட்டது பாஜகவினரையே புருவம் உயர்த்தச் செய்தது. இப்போது அவர் முதலமைச்சராகவே ஆக்கப்பட்டுள்ளார். பஜன் லால் சர்மாவை முதலமைச்சராக ஆக்குவதற்கு ஆரம்பத்திலிருந்தே பாஜக மேலிடம் திட்டமிட்டிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
முதலமைச்சராக புதுமுகம்: எனினும், சங்கனெர் தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிட்ட பஜன்லால் சர்மா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜை தோற்டித்து முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். சங்கனேர் தொகுதியில் காங்கிரஸின் புஷ்பேந்திர பரத்வாஜை 48,081 வாக்குகள் வித்தியாசத்தில் பஜன்லால் சர்மா தோற்கடித்தார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. சத்தீஸ்கர் மற்றம் மத்திய பிரதேசங்களில் இதற்கு முன் முதல்வராக இருந்தவர்களுக்குப் பதிலாக புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சத்தீஸ்கரில் விஷ்னு தியோ சாயும், மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில், ராஜஸ்தான் முதல்வராக புதிய முகமான பஜன்லால் சர்மா தேர்வாகி உள்ளார்.
சொத்து மதிப்பு, கிரிமினல் வழக்கு: 56 வயதான பஜன்லால் சர்மா ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின்படி,, 2022-23-ஆம் ஆண்டில் பஜன்லால் சர்மாவின் மொத்த வருமானம் ரூ.6,86,660. அதேசமயம், இந்த காலகட்டத்தில் அவரது மனைவி பெயரில் அறிவிக்கப்பட்ட தொகை ரூ.4,27,080. பஜன்லால் சர்மாவின் மொத்த அசையும் மற்றும் அசையா சொத்துகள் சுமார் ரூ.1.4 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஜன்லால் சர்மாவுக்கு ரூ.46 லட்சம் அளவில் கடனும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது கிரிமினல் வழக்கும் உள்ளது. அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தியதாக, பஜன்லால் சர்மா மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அயோத்தியில் ராமர் கோயிலுக்கான போராட்டத்தின் போது பஜன்லால் சர்மாவும் சிறைக்குச் சென்றதாக ராஜஸ்தான் மாநில பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications