பெரிய ட்விஸ்ட்.. திடீரென காங்-ஐ பாராட்டிப் பேசிய குலாம் நபி ஆசாத்! உற்று பார்க்கும் காஷ்மீர் மக்கள்
ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து சில வாரங்களுக்கு முன் விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திடீரென அக்கட்சியைப் பாராட்டிப் பேசியுள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், அக்கட்சியில் இருந்து வரிசையாக பல்வேறு தலைவர்களும் விலகி வருகின்றனர்,
சிந்தியா, கபில் சிபில் என இந்த லிஸ்ட் சென்று கொண்டே இருக்கும். இந்தச் சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகினார்.

குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் போது, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமையை அவர் மிகக் கடுமையாகச் சாடினார்.. காங்கிரஸ் கட்சி கிட்டதட்ட முடிந்துவிட்டது என்ற ரேஞ்சில் தான் அவர் பேசினார். ராகுல் காந்தி குழந்தைத்தனமாகச் செயல்படுவதாகவும் விமர்சித்தார். மேலும், பாஜகவில் இணையப் போவதாக வெளியான கருத்துகளை மறுத்த அவர் சொந்த மாநிலமான காஷ்மீரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.

காங்கிரசுக்கு திடீர் ஆதரவு
காங்கிரஸ் கட்சியில் இருந்து அவருடன் விலகிய நிர்வாகிகள், இந்த புதிய கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காஷ்மீரில் பல்வேறு இடங்களில் கூட்டங்களில் அவர் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு வருகிறார். இதனிடையே அவர் திடீரென காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதாவது குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜகவுக்குச் சவால் அளிக்க முடியும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

ஆம் ஆத்மி மீது அட்டாக்
மேலும், ஆம் ஆத்மி கட்சியை வெறும் டெல்லி கட்சியாக மக்கள் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி என்றும் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானதாக இருந்தது இல்லை எனத் தெரிவித்த அவர், பலவீனமான கட்சி அமைப்பே அதற்கு எதிராக உள்ளதாகவும் தெரிவித்தார். குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்பட வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரே கட்சி காங்கிரஸ்
இது குறித்து அவர் கூறுகையில், "இந்த இரு மாநிலங்களில் ஆம் ஆத்மியால் எதுவும் செய்ய முடியாது. காங்கிரஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அது அனைவருக்குமான கட்சி. காங்கிரஸ் கட்சி இந்து, முஸ்லீம் விவசாயிகளை ஒரே போலத் தான் பார்க்கிறது. பஞ்சாபிலேயே ஆம் ஆத்மி செயல்பாடுகளில் மக்கள் திருப்தியாக இல்லை. இனி எந்தவொரு தேர்தலிலும் அவர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கவே மாட்டார்கள்.

காஷ்மீர்
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே அனைவருக்குமான ஒரு ஆட்சியைத் தர முடியும். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் தருவது தொடர்பாக மத்திய அரசு யோசிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை நாங்கள் பல முறை மத்திய அரசிடம் எடுத்துக் கூறியுள்ளோம். விரைவாக இந்த விஷயத்தில் அவர்கள் முடிவெடுத்தால் நிச்சயம் அதை நாங்கள் வரவேற்போம்" என்று அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியில் மிக மூத்த தலைவர்களில் ஒருவராகக் குலாம் நபி ஆசாத் அறியப்பட்டார். அவர் காங்கிரஸில் இருந்து விலகும் போது, ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்து இருந்தார். கடந்த காலங்களில் ராகுலின் செயல்பாடுகளைப் பட்டியலிட்ட அவர், அவை எல்லாம் காங்கிரஸ் கட்சியை எந்தளவுக்குப் பலவீனப்படுத்தியது என்பதையும் விரிவாக விளக்கி இருந்தார்,

முக்கியம்
இந்தச் சூழலில் அதே குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரஸ் கட்சியைப் பாராட்டியுள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. விரைவில் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் ஹிமச்சல பிரதேசம் என இரு மாநிலங்களிலும் பாஜகவே ஆளும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் அங்கு எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், ஆம் ஆத்மியும் கட்சியை அங்கு வளர்க்க முயல்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications