கோவா சட்டசபைத் தேர்தல்: பிரியங்கா காந்தி இன்று பிரசாரம்- சிவசேனாவுடன் காங். கூட்டணி!
பனாஜி: கோவா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தொடங்குகிறார். கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-சிவசேனா கூட்டணி அமைக்க இருக்கிறது.
கோவா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. 2017 சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 40 இடங்களில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்றது. பாஜக 13 இடங்களில்தான் வென்றது. ஆனால் மாநில கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

காங். பலவீனம்
கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்தனர். தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் தற்போதைய நிலையில் கோவா சட்டசபையில் காங்கிரஸுக்கு வெறும் 3 இடங்கள்தான் உள்ளது.

அடுத்தடுத்து கட்சி தாவல்
இந்த நிலையில் அடுத்த ஆண்டு கோவா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கோவா முன்னாள் முதல்வர்களில் ஒருவரான மூத்த காங்கிரஸ் தலைவர் லூயிசின்ஹோ பலீரோ திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். மற்றொரு முன்னாள் முதல்வர் ரவிநாயக் பாஜகவில் இணைந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரதாப்சிங் ரானே, காங்கிரஸைவிட்டு விலகுவார் என கூறப்படுகிறது. ஆனால் அவர் அதை திட்டவட்டமாக மறுத்தும் வருகிறார்.

பாஜகவுக்கு சாதகம்
கோவா சட்டசபைத் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளும் இம்மாநிலத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிறது. காங்கிரஸூக்கு சிங்கிள் டிஜிட் இடங்களே கிடைக்கக் கூடும் என்கின்றன. இதனிடையே மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சிவசேனா ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் ராவத் சந்தித்தார். கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-சிவசேனா கூட்டணி குறித்து இருவரும் விவாதித்தனர்.

பிரியங்கா பிரசாரம்
இந்த பின்னணியில் கோவா மாநிலத்தில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். உ.பி.யில் பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. பிரியங்கா காந்தியும் பெண்களுக்கு முன்னுரிமை தரும் திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி அமல்படுத்தும் என்ற உறுதிமொழியுடன் மகளிருக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் ராகுல் காந்தி கோவாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications